
காவிரி நதிநீர் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழகம் சார்பில் அதிமுக அரசு வழக்கை சரியாக நடத்தவில்லை என்றும், இது அதிமுக அரசின் கையாலாகாத தனம் என்றும் திமுகவின் துரைமுருகன் கூறியுள்ளார்.
காவிரி நதி நீரைப் பங்கிட்டு கொள்வதில், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக முடிவு எடுக்க, காவிரி நடுவர் மன்றம், 1990ல் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தில் நீண்ட காலம் நடந்து வந்த வழக்கில், 2007ல், இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன.
இது தொடர்பான அனைத்து மனுக்களையும், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்தது. இந்நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், காவிரி நீரை உரிமை கோர எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை என்று அதிரடியாக தெரிவித்துள்ளது. தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து தமிழகத்தின் பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுகவைச் சேர்ந்த துரைமுருகன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், காவிரி நதிநீர் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தபோது, இந்த வழக்கை அதிமுக சரியாக நடத்தவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுவதாக கூறினார். காவிரி நதிநீர் வழக்கை நடத்துகிறபோது, கர்நாடகத்தில் ஒரே வழக்கறிஞர் நீண்ட நெடுங்காலமாக இருந்து வாதாடி வருகிறார். அவரே நடுவர் நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வாதாடி வந்துள்ளார்.
ஆனால், உச்சநீதிமன்றத்தில் வாய்தாவுக்கு ஒரு வக்கீல் என்ற கணக்கில் காவிரி நதிநீர் வழக்கை அதிமுக குளறுபடி செய்துள்ளது. காவிரிநதிநீர் பற்றி விவரம் தெரிந்த வழக்கறிஞர்கள் பராசரன், கந்தூரி உள்ளிட்டவர்களை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டது அதிமுக அரசு. இப்படிப்பட்ட தீர்ப்பு பெறுவதற்கு அதிமுக அரசுதான் காரணம்.. நாம் கிட்டத்தட்ட 15 சதவீத டி.எம்சி. தண்நீரை இழந்து விட்டோம்; இது அதிமுக அரசின் கையாலாகாத தனம்.
இந்த தீர்ப்பு கேட்ட பிறகு, என்னுடைய மனம் மிக நொந்து போயிருப்பதாகவும், அய்யோ தமிழகமே, இப்படிப்பட்ட ஆட்சியிலேயா நீ மாட்டிக் கொண்டிருக்கிறாய் என்று துரைமுருகன் ஆதங்கத்தோடு பேட்டி கொடுத்திருந்தார்.