
‘“அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை இருந்தால்தான் அரசு வேலை என நான் மட்டுமல்ல யாராலும் அப்படி சொல்ல முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் அந்தர் பல்டி அடித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "அதிமுக தொண்டர்கள் கவலைப்படத் தேவையில்லை. இனி நீங்கள் கைகாட்டுபவர்களுக்கே பதவியும் வேலைவாய்ப்பும் கிடைக்கும். இதனைத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே பேசியுள்ளோம்" என பேசி அதிரவைத்தார். அதாவது எதிர்காலத்தில் அதிமுக தொண்டர்கள் கை காட்டும் நபர்களுக்கு தான் அரசு பணி வழங்கப்படும் என சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
இதற்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் கலாய்த்தனர். திமுக எம்.பி கனிமொழி, அரசு வேலைக்குத் தகுதியும் திறமையும் இருந்தாலும் அதைவிட அதிமுக உறுப்பினர் அட்டைதான் பெரியது என்பது இளைஞர்களை மிரட்டும் செயல் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் நலம் வாழ்வு என்ற பெயரில் சித்த மருத்துவக் கண்காட்சி இன்று காலை நடைபெற்றது. இந்த கண்காட்சியைத் துவக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால் இதனை மறுத்த அமைச்சர், "அரசு வேலைவாய்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடந்துவருகிறது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்களும் பங்குகொள்கின்றன. முகாம் விரைவில் எங்கள் மாவட்டப் பகுதியில் நடைபெறவுள்ளது. இதனை மனதில் வைத்துத்தான் தகுதி அடிப்படையில் அதிமுகவினர் கைகாட்டுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினேன். அரசுப் பணியில் அதிமுகவினர் கைகாட்டுபவர்களுக்கே வேலை என்று என்னால் மட்டுமல்ல எவராலும் கூற இயலாது" என அந்த பல்டி அடித்துள்ளார்.