
முதல்வர் பதவியில் இருக்கும் வரை வாய் மூடி இருந்த பன்னீர்செல்வம், அது பறிபோனதும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று நாடகமாடுவதாக தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நாகூரான் தோட்டம், புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, ஜெயலலிதா என்னும் மாபெரும் தலைவர் போட்டியிட்டு வென்ற இந்த ஆர்.கே.நகர் தொகுதியில், அவர் பெயரை சொல்லி அனுதாபம் தேடுபவர்களிடம் ஏமார்ந்துவிட கூடாது என்றார்.
ஜெயலலிதாவின் பெயரை நான் மட்டும்தான் உரிமை கொண்டாட முடியும். இங்கு பதவி ஆசையில் சிலர் சுற்றிச்சுற்றி வருகிறார்கள். ஜெயலலிதா பெயரை கூறிக்கொண்டு வருகிறார்கள்.
ஜெயலலிதா என்ற மாபெரும் மக்கள் தலைவர் நின்று வென்ற இத்தொகுதியில், யாரை வைத்து அழகு பார்ப்பது என்று உங்களுக்குத் தெரியும்.
ஜெயலலிதா பெயரை கூறிக்கொண்டு யாராவது வாக்கு கேட்டு வந்தால் அவர்களை விரட்டியடியுங்கள். ஓட ஓட விரட்டியடியுங்கள். அவர்களுக்கு ஓட்டுப் போடாதீர்கள். எனக்கு ஓட்டுப் போடுங்கள்.
ஜெயலலிதாவின் சபதங்கள் நிறைவேறிட, அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட, எனது கரத்துக்கு வலுச் சேருங்கள். எனக்கு வாக்களியுங்கள். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.
இந்த தொகுதியில், அனைவருக்கும் முதியோர் பென்சன் கிடைக்க ஏற்பாடு செய்வேன். தொகுதியில் நடமாடும் மருத்துவக் குழு ஏற்பாடு செய்வேன் என்றும் தீபா குறிப்பிட்டார்.