
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தாம் வெற்றிபெற்றால் பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வர் ஆவார், சசிகலா அணி காணாமல் போகும் என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே. நகரில் ஓ.பி.எஸ் அணியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
கொருக்குப்பேட்டையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது பேசிய அவர், தாம் அமைச்சராக இருந்தபோது கொருக்குப்பேட்டை பகுதியில் பாதாளச் சாக்கடை, மழைநீர் வடிகால் திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்றார்.
சசிகலா அணியின் வேட்பாளர் தினகரன் பணப்பெட்டியை வைத்துக்கொண்டு வாக்குசேகரிக்க வருகிறார். பணத்தால் வாக்குகளை விலைபேச முடியாது.
ஆனால் நான், தொகுதிக்கு செய்த நலத்திட்டங்களை கூறி உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன் என்றார்,
மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்ட ஜெயலலிதா, தம்மையே மாற்று வேட்பாளராக தேர்வு செய்தார் என்று கூறினார்.
சசிகலாவையோ, தினகரனையோ, திவாகரனையோ தேர்வு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்த தேர்தலை வெறும் இடைத்தேர்தலாக கருத வேண்டாம். சசிகலா, தினகரன் அணியை விரட்டி அடிக்கும் தேர்தலாக எண்ணி வாக்களியுங்கள்.
பன்னீர்செல்வத்தின் விசுவாசத்தால் அவரை 3 முறை முதலமைச்சராக்கினார் ஜெயலலிதா. தேர்தலில் நான் வெற்றி பெற்றால் ஓ.பன்னீர்செல்வம்தான் மீண்டும் தமிழகத்தின் முதல்வர்.
இடைத்தேர்தல் முடிந்ததும் சசிகலா அணி என்பதே காணாமல் போய்விடும் என்றும் மதுசூதனன் தெரிவித்தார்.