
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்றனர். இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.
இதனால் சசிகலா தலைமையை விரும்பாத அதிமுகவினர் பலர், தீபாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், மாநிலம் முழுவதும் தீபா பேரைவை துவங்கி, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினர்.
இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். இதை தொடர்ந்து கடந்த மாதம் 24ம் தேதி, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை தீபா தொடங்கினார்.
ஜெயலலிதா 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் இடை தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இங்கு தீபா போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். இதனால், அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். தேர்தலுக்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நேரத்தில் தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே பேரவையை வழி நடத்தி செல்வதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் மோதல் இருந்து வந்தது. இது கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூகம்பமாக வெடித்தது.
தீபாவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அவரது கணவர் மாதவன் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அதிரடியாக அறிவித்தார். தீபா பேரவைக்குள் தீய சக்திகள் புகுந்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்த அவர் சசிகலாவே தீபாவை இயக்குகிறார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அதிமுக பொது செயலாளர் சசிகலாவை எதிர்த்தே தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆனால், அவரது கணவர் மாதவன், தீபாவை இயக்குவதே சசிகலாதான் என்று கூறி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆர்கே இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை, தாக்கல் செய்ய முடிவு செய்தார். ஆனால் திடீரென அநத முடிவை, நாளை செய்வதாக தள்ளி வைத்துவிட்டார்.
நாளை காலை 10 மணிக்கு மெரினாவில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்துககு தீபா செல்கிறார். அங்கு, வேட்பு மனுவை அங்குள்ள நினைவிடங்களில் வைத்து வணங்கிவிட்டு, ஆர்.கே. நகரில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் தீபா.
இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபா அதனை நாளைக்கு தள்ளி வைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இன்று நல்ல நாள் இல்லை என்றும், அதனாலேயே தீபா நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது.