
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரமாண பத்திரத்தில் தங்களது சொத்து கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் சசிகலா தரப்பில் போட்டியிடும் தினகரன், தமக்கு 11 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அசையும் சொத்துக்களும், 57 லட்சம் ரூபாய்க்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், தமது மனைவி பெயரில் 7 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, தமக்கு 1 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்துக்களும், 2 கோடி ரூபாய்க்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றவரும், அந்நிய செலாவணி வழக்கில் 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டவரான தினகரனுக்கு வெறும் 68 லட்ச ரூபாய்க்குதான் சொத்து இருக்கிறதாம்.
அதனால் அவர் வெறும் லட்சாதிபதிதான். ஆனால், ஒரு சாதாரண லட்சாதிபதியான அவர், ஒரு கட்சியையும், ஆட்சியையும் எப்படி ஆட்டிப் படைக்கிறார்? என்பது ஆச்சர்யம்தான்.
அதே சமயம் தீபா, தமது அண்ணன் மக்கள் என்ற போதும், ஜெயலலிதா அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் தீபாவோ, அசையும் சொத்து, அசையா சொத்து என 3 கோடி ரூபாய்க்கு தமக்கு சொத்து இருப்பதாகக் கணக்கு காட்டி உள்ளார்.
மறுபக்கம், ஆந்திரா வங்கியில் வாங்கிய கல்விக்கடன் 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய், நிலுவையில் இருப்பதாகவும், ஹோண்டா ஆக்டிவா என்ற இரு சக்கர வாகனம் உள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் சொத்து மதிப்பை பார்க்கும்போது, தீபா கோடீஸ்வரர், ஆனால் தினகரன் வெறும் லட்சாதிபதிதான் என்றால் அது ஆச்சர்யம்தானே?