
எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றும் விவகாரத்தில் ஒருதலைபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து கடந்த 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டவர்களை நீக்கி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.
இதையும் படிங்க;- எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செல்லாது..! இபிஎஸ்க்கு செக் வைத்த ஓபிஎஸ் அணி
இந்நிலையில், அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்டமாக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அந்த பதவியில் இருந்தும் ஓபிஎஸ் இன்று நீக்கப்பட்டார். இதனையடுத்து, அந்த பதவிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமிக்கபட்டுள்ளார். துணைச் செயலாளராக அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க;- OPS பதவி பறிப்பு! எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்! அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு முக்கிய பதவி
இதுகுறித்து சபாநாயகர் அலுவலகத்தில் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி கடிதம் அளித்துள்ளார். அதில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படுகிறார். ஆர்.பி. உதயகுமாரை துணை தலைவராக தேர்வு செய்கிறோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது முடிவு சபாநாயகர் அப்பாவு கைக்கு சென்றுள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவரை நீக்குவது என்றால் அதற்கு சபாநாயகர்தான் அனுமதி அளிக்க வேண்டும். அப்பாவு என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில்;- எஸ்.பி.வேலுமணி அளித்துள்ள கடிதம் மீது பரிசீலித்து முடிவெடுக்கப்படும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நியாயமான வகையில் எந்த விதமான ஒருதலைச் சார்புமின்றி முடிவு எடுக்கப்படும். ஓ.பன்னீர்செல்வம் அளித்த மனுவும் பரிசீலனையில் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். ஏற்கனவே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டால், அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.