குப்பை கிடங்கை அகற்றுங்க.. போராடும் மக்கள்..! கண்டுகொள்ளாத அரசு..! ரேஷன் கார்டை முதல்வரிடம் ஒப்படைக்க முடிவு..!

First Published Nov 17, 2017, 6:20 PM IST
Highlights
deavakottai rastha garbage warehouse people protest


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் புறநகர்ப்பகுதியான தேவகோட்டை ரஸ்தா பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. தேவகோட்டை, காரைக்குடி ஆகிய நகர்ப்பகுதிகளில் திரட்டப்படும் குப்பைகள், ரஸ்தாவில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன.

குப்பை கிடங்கால், அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். ரஸ்தா மட்டுமல்லாது, சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 கிராம மக்கள், குப்பையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆதிதிராவிடர் நலப்பள்ளி அமைந்திருந்த பகுதியில், சிறிது சிறிதாக குப்பைகள் கொட்டப்பட்டு, பின்னர் காலப்போக்கில் மாபெரும் குப்பை கிடங்காக மாறிவிட்டதாக ரஸ்தா மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த குப்பை கிடங்கை அகற்றக்கோரி ஏற்கனவே பல போராட்டங்களை அப்பகுதிவாசிகள் நடத்தியுள்ளனர். எனினும் அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குப்பை கிடங்கு மட்டுமல்லாமல், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதற்கும் ரஸ்தா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்கள் வாழும் பகுதியை குப்பைகளின் கூடாரமாக மாற்றக்கூடாது என மக்கள் குமுறுகின்றனர்.

குப்பை கிடங்கையும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதையும் வேறு இடத்திற்கு மாற்றக்கோரி 5 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அரசு செவிசாய்த்த மாதிரி தெரியவில்லை.

இதனால், போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக, சிவகங்கையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக நாளை சிவகங்கை வர உள்ள முதல்வரிடம், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க உள்ளதாக ரஸ்தா பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்களது கோரிக்கைக்கு அரசும் அதிகாரிகளும் செவிமடுக்காததால், ரஸ்தா மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். 
 

click me!