லேசில் விடாத லெக்சஸ் கார்... அசைந்து கொடுக்காத அதிகார மையம்... அடுத்தடுத்து வீழ்த்திய அதிரடி தீர்ப்புகள்!

Asianet News Tamil  
Published : Nov 17, 2017, 05:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
லேசில் விடாத லெக்சஸ் கார்... அசைந்து கொடுக்காத அதிகார மையம்... அடுத்தடுத்து வீழ்த்திய அதிரடி தீர்ப்புகள்!

சுருக்கம்

car import case two years jail term upheld by high court but natarajans efforts in vain

இது சசிகலா குடும்பத்துக்கு  போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன் விதைத்த வினை இன்று அந்தக் குடும்பத்துக்கு வினையாகிப் போயுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த போது, அதிகார மட்டத்தின் துணையுடன் கண்ணை மூடிக் கொண்டு முறைகேடுகளை செய்யத் தொடங்கினார்கள். அதற்கு பின்னர் வந்த ஆட்சிகளில் வழக்குகள் பாய்ந்தன. ஆனாலும் அடுத்த பத்தாண்டுகளில் நீதிமன்றங்களில் வாய்தா, ஒத்திவைப்பு, மேல் முறையீடு என்று காலம் கடத்திக் கொண்டிருந்தார்கள்.  ஆனால், வழக்குகளின் தீர்ப்புகள் இப்போது வரிசையாக கதவுகளைத் தட்டுகின்றன.

சென்ற வருடம் காலமான ஜெயலலிதாவின் ஆன்மா, சசிகலாவின் குடும்பத்தை நிம்மதியாக இருக்க விடாது என்று எந்த ஜோசியர் சொன்னாரோ... இப்போது அவை ஒவ்வொன்றாக அரங்கேறி வருவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மா, ஆவி என்பதெல்லாம், அறிவுக்குப் பொருந்தாதவைதான் என்றாலும்,  மக்களின் கர்ம வினை மீதான நம்பிக்கைகள் இவ்வாறு பேச வைத்திருகின்றன. 

சசிகலா சிறைக்குப் போனார். தொடர்ந்து அவரது குடும்பத்தில் இழப்புகள். சொந்த அண்ணன் மகன் மகாதேவன் காலமானபோது அவரால் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை. கட்சியிலும் ஆட்சியிலும் பிடி கைவிட்டுப் போனது.  வருமானத்துகுப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூரு சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் வீடுகளில் அதிரடி சோதனைகள் கலகலத்தன. குறிப்பாக ஜெயா டிவி., ஜாஸ் சினிமாஸ் என சோதனைகளின் மூலம் கோடிகணக்கான சொத்துகள் இப்போது கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றன.  கணவர் நடராஜன் உடல் நலமின்றி இருந்து அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால், என்றோ போடப்பட்ட முறைகேடு வழக்குகள் இப்போது மீண்டும் துரத்தத் தொடங்கியிருக்கிறது. 

வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டது குறித்து அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் இன்று சசிகலாவின் கணவர் நடராஜன் மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

1994இல், லண்டனில் இருந்து 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார் நடராஜன். ஆனால், இந்தக் காரை ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய கார் என்று கூறி இறக்குமதி செய்தார். ஆனால் இது புதிய கார் என்றும், பழைய கார் என்று கூறி இறக்குமதி செய்ததில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

இந்நிலையில், சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். அப்போது,1994ல் வெளியான புதிய ரக கார்தான் அது என்று தெரிய வந்தது. இவ்வாறு வரி ஏய்ப்பு மூலம், ரூ.1.06 கோடி இழப்பு ஏற்படுத்தி விட்டதாக நடராஜன், அவரது உறவினர் வி.என். பாஸ்கரன், அந்தக் காரை அனுப்பிய லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், இந்தியன் வங்கியின் அபிராமபுரம் கிளை மேலாளர் சுசரிதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. சிபிஐ விசாரித்து வந்த நிலையில், தொழிலதிபர் பாலகிருஷ்ணன் தலைமறைவானார். எனவே, நடராஜன் உள்ளிட்ட நால்வர் மீது, சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், 2010ல் நடராஜன் உட்பட நான்கு பேருக்கும் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. ஆனால் இதை எதிர்த்து நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். எனவே, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அதில் விசாரணை நீதிமன்றம் தங்களின் தரப்பு வாதத்தை முழுமையாக ஏற்காமல் சிறை தண்டனை விதித்துள்ளதாகவும், எனவே விசாரணை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே, சொகுசு கார் இறக்குமதி செய்தது தொடர்பாக, அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தில், மத்திய அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கும் எழும்பூர் நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி நடராஜன் உட்பட நால்வரும் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இப்படி வழக்குகள் கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்தபோது, இரு தினங்களுக்கு முன்னரே இந்த வழக்குகளின் போக்கு குறித்தும், இவற்றில் தண்டனை உறுதி செய்யப் படும் என்றும் நடராஜனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடராஜனும் எதிர்பார்த்தாராம். இந்நிலையில், சசிகலாவின் உறவினரான பாஸ்கரனுக்கும் சீதளாதேவிக்கும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் எதிர்பார்த்துள்ளனர்.

ஏற்கெனவே இந்த வழக்குகளில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுகளின் போது, மேலும் மேலும் ஒத்திவைத்து இழுத்தடிக்கப்பட்டது. இம்முறை, உடல் நலம் இன்றி மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்க அல்லது விடுவிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நடராஜன் தரப்பில் களம் இறங்கினராம். 

இதற்காக, உயர் நீதிமன்ற நீதிபதியை நேரடியாகப் பிடித்து, அல்லது வேறு நீதிபதிகளின் மூலம் அல்லது வேறு எவர் மூலமாவது நெருங்கி தீர்ப்பை தாமதப் படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். ஆனால் எதுவும் பலனளிக்காத நிலையில், மேல் மட்டத் தொடர்புகளில் உள்ள, நடராஜனுக்கு நெருக்கமான ஒரு மூத்த பத்திரிகையாளர் மூலமே காய் நகர்த்தத் தொடங்கினராம். அவருக்கு நெருக்கமான வேறு மாநில உயர்நீதிமன்ற நீதிபதியைத் தொடர்பு கொண்டு இது விவகாரத்தில் நேரடியாகவோ அல்லது வேறு யார் மூலமாகவேனும் பார்த்துச் செய்யச் சொல்லுமாறு கோரப்பட்டதாம். ஆனால் அந்த மூத்த நீதிபதியோ, நேர்மைக்குப் பேர் போனவர். இந்த நெருக்கடிகளுக்கு உட்படாமல் கைவிரித்துவிட்டாராம். 

இப்படி பலவித ஏற்பாடுகளை செய்து கொண்டபடி, இரு தினங்களுக்கு முன்னர் நடராஜனின் வீடே அல்லோலகல்லோலப் பட்டிருக்கிறது. இரவெல்லாம் கண் விழித்துக் காரியம் செய்தும், எதுவும் கை கொடுக்கவில்லை.  எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில், நேற்று பாஸ்கரன், சீதளாதேவி ஆகியோருக்கு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதைக் கேட்டு ரொம்பவே அதிர்ந்து போனது நடராஜன் தரப்பு தானாம். தனக்கும் இதே போன்ற தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று உயர் நீதிமன்றம் அதை அறிவித்துள்ளது. கீழ் நீதிமன்ற தண்டனையை உறுதி செய்து அளித்த தீர்ப்பு நடராஜன் தரப்பினரால் எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலும், பெரும் ஏமாற்றங்களுக்கு இடையே நெஞ்சில் தாக்கிய நெருஞ்சி முள்ளாய் அமைந்துவிட்டது. 

PREV
click me!

Recommended Stories

சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!