
அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் முழு உடல்நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியானதை அடுத்து தேமுதிக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கேப்டன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார், எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்படிருந்தது.
இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் நலம் பெற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் முழு உடல்நலன் பெற்று தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள விழைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.