அதிமுவுக்கு ஆபத்து.. அதிமுகவை கபளீகரம் செய்ய திட்டம்.. அலறும் திமுக கூட்டணி கட்சி.!

By Asianet TamilFirst Published Oct 18, 2021, 7:13 AM IST
Highlights

அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கி அக்கட்சியை கபளீகரம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

அதிமுகவின் 50-ஆம் ஆண்டு பொன் விழாவையொட்டி சசிகலா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சசிகலாவின் இந்தச் செயல்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் சசிகலாவை வைத்து அதிமுகவில் குழப்பத்தை உருவாக்க முயற்சிகள் நடப்பதாக திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “சசிகலாவின் வருகையால் அதிமுகவில் கோஷ்டி பூசல் இன்னும் அதிகரிக்கும். அதிமுகவில் குழப்பத்தை உருவாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன்மூலம் அந்தக் கட்சியைக் கபளீகரம் செய்ய பாஜக முயற்சித்து வருகிறது. மாநில அரசுகளுக்கு போதுமான நிலக்கரியை கொடுக்க மத்திய அரசு மறுக்கிறது. அதனால், பல மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டிருக்கிறது. தமிழக முதல்வர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்களையும் அதிக நிதியையும் வழங்க வேண்டும்.
அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதே நல்லது. கோயில் ஆவணங்கள், விலை மதிப்பற்ற நகைகள், பல ஆயிரம் கோடிகளைப் பாதுகாக்க வேண்டு என்றால், அது அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அறநிலையத் துறை சார்பில் கல்லுாரிகள் தொடங்குவது வரவேற்கத்தக்கதுதான். அதேசமயம் அக்கல்லூரியில் பேராசிரியர்கள், பணியாளர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது ஏற்கதக்கதல்ல. இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

click me!