ஏழு தமிழர்களை விடுதலை செய்வது முதல்வர் மு.க.ஸ்டாலினின் லட்சியம்.. சொல்கிறார் அமைச்சர் ரகுபதி..!

By Asianet TamilFirst Published Oct 17, 2021, 10:08 PM IST
Highlights

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். அது அவருடைய லட்சியம் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 
 

திருச்சியில் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருச்சி மத்திய சிறையில் 1,517 தண்டனை பெற்ற சிறைவாசிகள்  உள்ளனர். இந்தியாவிலேயே இரண்டு சிறைச்சாலைகளில் மட்டும்தான் ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ளது. இன்னொன்று திருச்சி சிறைச்சாலையில் உள்ளது. சிறைவாசிகள் 8, 10, 12 போன்ற வகுப்புகளுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். கல்லூரி படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு சிறை நிர்வாகம் வசதிகள் செய்து தருகிறது. 
சிறைச்சாலையில் உணவும்,மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் திருப்திகரமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறைக்கைதிகள் பாதுகாப்பில் அக்கறை உள்ள அரசாக திமுக அரசு உள்ளது. திருச்சி சிறப்பு முகாமில் தண்டனை காலம் முடிந்தவர்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அங்குள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் இருக்காது. எனவே, அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் பாதுகாப்பு இருக்காது. எனவேதான் சிறப்பு முகாமிலேயே அவர்களை வைத்துள்ளோம். கூடுதல்  நேரம் பணி செய்யும் சிறைக் காவலர்களுக்கான படியை ரூ. 200-லிருந்து உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
10 ஆண்டுகள் ஆயுள் தண்டனையை முடித்த கைதிகளை விடுவிக்க முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் சிக்கல் எதுவும் இல்லை. வெடிகுண்டு வழக்கு, தேச துரோக வழக்கு போன்ற கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க முடியாது. யாரையெல்லாம் விடுவிக்கலாம் என்ற பட்டியலை தயாராகிறது. அந்தப் பணி முடிய இன்னும் 20 நாட்கள் ஆகலாம்.
 ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். அது அவருடைய லட்சியம். அவர்களை விடுதலை செய்ய அரசு முழு முயற்சி எடுக்கும். ஏழு பேரில் ரவிசந்திரனின் தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுகுறித்து  முதல்வருடன் கலந்து பேசி பரிசீலனை செய்யப்படும்.” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.  

click me!