இதெல்லாம் ஒரு பொழப்பா.. தேர்தல் வந்தால் கூட்டுவது.. முடிந்தால் குறைப்பது.. மோடி அரசை மோசமாக விமர்சித்த MP..!

By vinoth kumarFirst Published Jul 27, 2021, 3:36 PM IST
Highlights

தேர்தல் ஆண்டு வந்தவுடன் மானியத்தை சற்று கூட்டி தேர்தல் முடிந்தவுடன் பெரும் விலை உயர்வை செய்திருப்பதும் வெளிப்படையாக தெரிகிறது. அமெரிக்கா கூட கார்ப்பரேட் வரிகளை உயர்த்தும் போது கூட இங்கு கார்ப்பரேட் வரிகளை உயர்த்தாமல் சாதாரண மக்களின் அடுப்படிக்குள் புகுந்து அபகரிப்பது நியாயமற்றது.

மக்கள் கோவிட் காரணமாக பெரும் பொருளாதார சுமைக்கு ஆளாகி இருக்கும் நிலையில் இவ்வளவு விலை உயர்வை சமையல் எரிவாயு விலையில் ஏற்படுத்தி இருப்பது குரூரமானது என சு.வெங்கடேசன் மத்திய அரசை லெப் ரைட் வாங்கியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் அவரது முகநூல் பக்கத்தில்;- சமையல் எரிவாயு தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி மக்களவையில் கேள்வி எழுப்புகையில்;- 2016 ல் துவங்கி 2021 வரை எவ்வளவு பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்ற அரசின் வேண்டுகோளுக்கு செவி மடுத்துள்ளார்கள், சமையல் எரி வாயுக்காக எவ்வளவு மானியங்கள் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ளன, மானிய குறைப்பால், விட்டுக் கொடுத்ததால் அரசுக்கு மிச்சமான தொகை எவ்வளவு என்ற கேள்விகளை (எண்: 1010/ 26.07.2021) சு. வெங்கடேசன் எம்.பி நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார். 

இதற்கு மத்திய அமைச்சர் ராமேஸ்வர் தெலி பதிலளிக்கையில்;-

நாட்டில் மொத்தம் சமையல் எரிவாயு நுகர்வோர் 31.03.2021 அன்று 28.95 கோடி பேர் உள்ளனர் என்றும் அவர்களில் 1.08 கோடி பேர் மட்டுமே "மானியத்தை விட்டுக் கொடுங்கள்" என்ற வேண்டுகோளுக்கு செவி மடுத்துள்ளனர் என்றும், மொத்த மானியம் 2016- ரூ 22029 கோடிகள், 2017- ரூ 18337 கோடிகள், 2018 - ரூ 23464 கோடிகள், 2019- ரூ 37209 கோடிகள், 2020 - ரூ 24172 கோடிகள், 2021 - ரூ 11896 கோடிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், 2016 - 2021 காலத்திய நிதி ஆண்டுகளில் மானிய குறைப்பால், விட்டுக் கொடுத்ததால் அரசுக்கு மிச்சமான தொகை ரூ 57768 கோடிகள் எனவும் அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி கருத்து கூறுகையில்;- 

"அமைச்சரின் பதில் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தின் காரணத்தை அம்பலமாக்குகிறது. நரேந்திர மோடி அவர்கள் 2014 ல் பதவி ஏற்ற போது ஒரு சிலிண்டர் விலை ரூ 410.50. இன்றோ ரூ 850 ஐ தொட்டு விட்டது. ஏழு ஆண்டுகளில் இரண்டு மடங்கு விலை உயர்வு. கடந்த 10 மாதங்களில் மட்டும் 41 சதவீத விலை உயர்வு. மக்கள் கோவிட் காரணமாக பெரும் பொருளாதார சுமைக்கு ஆளாகி இருக்கும் நிலையில் இவ்வளவு விலை உயர்வை சமையல் எரிவாயு விலையில் ஏற்படுத்தி இருப்பது குரூரமானது.

அமைச்சரின் பதிலை பார்த்தால் தேர்தல் ஆண்டு வந்தவுடன் மானியத்தை சற்று கூட்டி தேர்தல் முடிந்தவுடன் பெரும் விலை உயர்வை செய்திருப்பதும் வெளிப்படையாக தெரிகிறது. அமெரிக்கா கூட கார்ப்பரேட் வரிகளை உயர்த்தும் போது கூட இங்கு கார்ப்பரேட் வரிகளை உயர்த்தாமல் சாதாரண மக்களின் அடுப்படிக்குள் புகுந்து அபகரிப்பது நியாயமற்றது" என்று சு. வெங்கடேசன் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.

click me!