மருத்துவமனையில் கொரோனா நோயாளி கழுத்தை நெறித்து கொலை.. மருத்துவமனை ஊழியர் கொடூர செயல்.

By Ezhilarasan BabuFirst Published Jun 16, 2021, 9:49 AM IST
Highlights

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர் ரதிதேவி என்பவர், பணம் மற்றும் செல்போனுக்காக ஆசைப்பட்டு பேராசிரியர் மனைவி சுனிதாவை கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் கிடந்த பேராசிரியர் மௌலி என்பவரின் மனைவி சுமிதா இறந்த வழக்கு சந்தேக மரணமாக இருந்த நிலையில் தற்போது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர் சுமிதாவை செல்போன், பணத்திற்காக கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் மௌலி. ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுனிதாவிற்கு (41) கடந்த மாதம் 22 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மூச்சுத் திணறல் இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 3வது மாடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

மனைவிக்கு உணவு கொடுத்துவிட்டு வீட்டிற்குச் சென்றவர் மீண்டும் கடந்த மாதம் 23 ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது சிகிச்சை பெற்று வந்த அறையில் இருந்து மனைவி சுனிதா மாயமானதால் அதிர்ச்சியடைந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சுனிதாவை மருத்துவமனை முழுவதும் ஊழியர்கள் தேடியும் அவர் கிடைக்காததால் மௌலி கடந்த மாதம் 31 ஆம் தேதி பூக்கடை காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக வாய்மொழிப் புகார் அளித்துவிட்டு சுனிதாவின் புகைப்படத்தை கொண்டு வருவதற்காக வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் அவருக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டதாலும், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காரணத்தாலும் மௌலியால் உடனே மீண்டும் வர முடியாத சூழ்நிலை உருவானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மருத்துவமனையின் 8வது மாடியில் இருந்து துர்நாற்றம் வந்ததால் அங்குச் சென்ற பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டறிந்து அதை பிணவறைக்கு கொண்டு சென்று வைத்துவிட்டு மனைவி காணாமல் போனதாக புகாரளித்த மௌலிக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு வந்த மௌலியிடம் பிணவறையில் இருந்த பெண்ணின் உடலைக் காட்டியபோது அது தான்  நீண்ட நாட்களாக தேடி வந்த தனது மனைவி சுனிதாதான் என அவர் அடையாளம் காட்டியுள்ளார். இதனையடுத்து மௌலியிடம் புகாரைப் பெற்று சந்தேக மரணம் என பதிவு செய்து பூக்கடை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர் ரதிதேவி என்பவர், பணம் மற்றும் செல்போனுக்காக ஆசைப்பட்டு பேராசிரியர் மனைவி சுனிதாவை கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. 

ராஜீவ்காந்தி மருத்துவமனை காவல் நிலைய போலீசார் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதிதேவியை கைது செய்துள்ளனர். மே 22 ஆம் தேதி கொரோனா பாதிப்பால் மருத்துவமனை 3 ஆம் மாடியில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமிதா சிகிச்சைபெற்று வந்த நிலையில் 23 ஆம் தேதி காணாமல் போனார். பின் 8வது மாடியில் உள்ள மின் பகிர்மான அறையில் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். என்பது குறிப்பிடதக்கது.  

click me!