முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உருவத்தை கேலி சித்திரம் வரைந்ததற்காக சிலரை செய்யும் காவல் துறை, இந்து கடவுளை, நாட்டின் பிரதமரை கேலி சித்திரம் மூலம் அவதூறு செய்யும் பதர்களைக் கைது செய்யாதது ஏன்?
மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் மனித நேய மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி ஆவேசமாக கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து ஓட்டப்பட்ட போஸ்டர் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், நிர்வாணமாக வேதனையுடன் நிற்கும் பெண்ணின் அங்கங்களை தேசியக் கொடிக் கொண்டும் மறைத்து, அவளின் அருகில் ராமன் லட்சுமணனாக மோடியும், அமித்ஷாவும் சிரித்தப்படி நிற்கும் பேனரை வைத்துள்ளனர். மனித நேய மக்கள் கட்சியின் இந்த செயலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வதோடு, மனித நேய மக்கள் கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உருவத்தை கேலி சித்திரம் வரைந்ததற்காக சிலரை செய்யும் காவல் துறை, இந்து கடவுளை, நாட்டின் பிரதமரை கேலி சித்திரம் மூலம் அவதூறு செய்யும் பதர்களைக் கைது செய்யாதது ஏன்? மதக் கலவரத்திற்கு வித்திடும் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளை, தலைவர்களை கைது செய்ய தயங்குவது ஏன்? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் மணிப்பூர் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக ஒரு விரும்பதகாத விளம்பர தட்டி ஒன்று கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் வைக்கப்பட்டிருந்தது. இப்படியான ஒரு விளம்பர தட்டி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்ததும் மேல் நிலை நிர்வாகிகள் இத்தட்டியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள். தட்டி வைக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில். போராட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த விரும்பதகாத தட்டி அப்புறப்படுத்தப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சி எந்த மதத்தினரின் உள்ளங்களையும் புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் கட்சியல்ல. இந்த விரும்பத்தகாத தட்டி வைப்பதற்கு காரணமானவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட்டார்கள். அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விளம்பரத் தட்டியால் எவரது உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.