உங்கள் நிறுவனத்தின் மதிப்பு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ரூ.75 லட்சமாக இருந்த அமித்ஷா மகன் நிறுவன மதிப்பு ரூ.130 கோடியாக உயர்ந்தது எப்படி? தனது மகன் சொத்து மதிப்பு எப்படி உயர்ந்தது என்று அமித்ஷாவால் சொல்ல முடியுமா?
உதயநிதியை முதல்வராக்குவதே திமுகவின் லட்சியம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.
திமுகவின் இளைஞரணி கூட்டம் அமைச்சர் உதயநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவலாயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் நிறுவனங்களில் உள்ள பணிகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகள் மீது ஏவும் மத்திய பாஜக அரசின் போக்கை வன்மையாக கண்டிப்பதாக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி;- திமுகவின் இளைஞரணி மாநாடு விரைவில் நடத்தப்பட உள்ளது. திமுகவின் இளைஞரணியின் மாநாட்டில் 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். திமுகவின் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முன்னெடுக்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று ராமேசுவரத்துக்கு வந்த அமித்ஷா என்னைப் பற்றி பேசி இருக்கிறார். என்னை முதலமைச்சர் ஆக்குவதுதான் முதலமைச்சர் லட்சியமாம். நான் மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் ஆகியுள்ளேன். உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பிசிசிஐ செயலாளர் ஆனார்? உங்கள் மகன் எத்தனை மேட்ச் விளையாடி இருக்கிறார் எவ்வளவு ரன் அடித்ததிருக்கிறார்? உங்கள் நிறுவனத்தின் மதிப்பு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ரூ.75 லட்சமாக இருந்த அமித்ஷா மகன் நிறுவன மதிப்பு ரூ.130 கோடியாக உயர்ந்தது எப்படி? தனது மகன் சொத்து மதிப்பு எப்படி உயர்ந்தது என்று அமித்ஷாவால் சொல்ல முடியுமா என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.