
லாலு பிரசாத் யாதவுக்கு அளிக்கப் பட்டு வந்த இசட் ப்ளஸ் பாதுகாப்பு குறைக்கப் பட்டுள்ளது. இது இனி இசட் பிரிவு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜ் பிரதாப் யாதவ், இதற்காக நான் மோடியின் தோலை உரித்து விடுவேன் என்று ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் விவிஐபி.,க்களுக்கு இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளுக்கு இருக்கும் அச்சுறுத்தல் அடிப்படையில் பாதுகாப்பின் தன்மை கூட்டப் பட்டு அல்லது குறைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதை மையமாக வைத்து, மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது தலைவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.
இப்படி மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், அண்மையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில், பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பை திரும்ப பெற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்கு உடனடியாக பதிலளித்த லாலுவின் மகன் தேஜ் பிரதாப், ஏற்கெனவே லாலு பிரசாத் யாதவ் மீது கொலை விவகார சர்ச்சை உள்ளது. அதை உத்தேசித்து சரியான பதிலடி கொடுப்போம். நான் நரேந்திர மோடியின் தோலை உரித்து விடுவேன் என்று ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இதை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக., எம்.பி., பர்வேஷ் வர்மா, தில்லி போலீஸில் இது குறித்து புகார் பதிவு செய்துள்ளார்.