எதற்கெடுத்தலும் புகார் கொடுக்கும் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் !! 1 கோடியே 50 லட்சம் முறைகேடு !!

By Selvanayagam PFirst Published Mar 10, 2019, 8:39 AM IST
Highlights

ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் கூட உடனடியாக புகார் கொடுத்து வழக்கு போடும் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மீது ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

சென்னை, நங்கநல்லுார் கூட்டுறவு கட்டட சங்கம், தற்போது, 6 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு, சங்கத்தின் முன்னாள் தலைவரும், தி.மு.க., - எம்.பி.,யுமான, ஆர்.எஸ்.பாரதியே காரணம் என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, தற்போதைய கூட்டுறவு சங்க தலைவரான, பரணி பிரசாத், தமிழ்நாடு கூட்டுறவு சங்க பதிவாளர், வில்வசேகரனிடம் புகார் அளித்துள்ளார். அதில் நங்கநல்லுார் கூட்டுறவு கட்டட.சங்கத்தில், நிரந்தர வைப்பு நிதியாக முதலீடு செய்தவர்களுக்கு, பல ஆண்டுகளாக, வட்டி வழங்கப்படவில்லை. இதனால், முதலீட்டாளர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்ததும், நஷ்டத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

நங்கநல்லுார் கூட்டுறவு கட்டட சங்கம், 1949ல் துவக்கப்பட்டது. அன்று முதல், 1990 வரை, சங்கம் லாபத்தில் இயங்கியது.நிர்வாக குழு அமைக்கப்பட்டு, 1996 முதல், 2001 வரை, சங்கத்தின் தலைவராக, தி.மு.க.,வை சேர்ந்த, ஆர்.எஸ்.பாரதி செயல்பட்டார்.

இந்த காலத்தில் தான், சங்கம் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டப்பட்டு உள்ளது.பழைய கணக்குகளை ஆய்வு செய்த போது, ஆர்.எஸ்.பாரதி பதவி காலத்தில், 1.50 கோடி ரூபாய் அளவிற்கு, மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. தன் மீதான, மோசடி புகார் வெளியாகாமல் இருக்க, 2000 -- 02ம் ஆண்டு வரையிலான கணக்குகளை, அவர் தணிக்கை செய்யாமல் விட்டுள்ளார். இந்த ஆண்டுகளுக்கான அறிக்கை, 2011ல் தணிக்கை செய்யப்பட்டு உள்ளது.

முகவரி இல்லாத நபர்களுக்கு வீட்டு கடன் அளித்தது; கடன் அளிக்கும் போது, கடன் பெற்றவர்களுக்கே தெரியாமல், கூடுதல் நிதி வழங்கியதாக பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சங்க இடத்தை பதிவாளர் அனுமதியின்றி, முறைகேடாக விற்றது என, பல மோசடிகள் நடந்துள்ளதும், தணிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அவர் மீது, லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த புகாரின் அடிப்படையில், மற்ற நிர்வாகத்தினருக்கு அளித்த உத்தரவை தவறாக பயன்படுத்தி, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் இருந்து விடுபட்டுள்ளார். இதையடுத்து  பாரதி செய்த மோசடிகள் குறித்து, முழு ஆதாரத்துடன், கூட்டுறவு கட்டட சங்க பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 

click me!