அதிரடியில் ஆளுநர்... அமுக்கமாய் ஆளுங்கட்சி... மகிழ்ச்சியில் பாராட்டும் மக்கள்..! 

First Published Nov 17, 2017, 2:20 PM IST
Highlights
common people wrote appreciation letters to governor for his move and invite their district for inspection


இந்த வாரத் துவக்கத்தில் தமிழகத்தைக் கலக்கிய நிகழ்வு, கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்ட ஆய்வுதான். பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு கோவை சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அதன் பின்னர், கோவையில் காவல் ஆணையர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை மெற்கொண்டார். 

ஸ்மார்ட் சிட்டி நகருக்கு தேர்வாகி கட்டமைப்பில் வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் கோவையில், நகரின் நிறை குறைகளைக் கேட்டறிய இந்த ஆலோசனைக் கூட்டத்தை  மேற்கொண்டார் ஆளுநர். அதே போல்,  திருப்பூர் மாவட்டத்துக்கும் திடுமெனச் சென்று, அங்கிருக்கும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பின்னும் இதே பாணியில் தொடர்ந்து தமிழகத்தின் பல  மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்வேன் என்று கூறியிருந்தார். 

ஆனால் ஆளுநரின் செயல்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு இத்தகைய அதிகாரம் இல்லை என்று பலரும் குரல் கொடுத்தனர். எதிர்க்கட்சியினர், இதனை பெரிதும் விமர்சித்தனர். மாநில சுயாட்சி பறிபோகிறது, மத்திய அரசு கொல்லைப் புறம் வழியாக தமிழகத்தை ஆள நினைக்கிறது என்றெல்லாம் கூறினர். ஆனால், ஆளும்கட்சியினரோ அமைச்சர்களோ இது குறித்து பெரிதாக எதையும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆளுநரின் ஆய்வை டேக் இட் ஈஸி பாலிஸி என்று எடுத்துக் கொண்டனர். ஓரிரு முக்கல் முனகல் சத்தம் வந்தபோதும், பெரிதாகக் குரல் எழுப்பவில்லை.

தமிழகம் ஊழல்வாதிகள் பெருகிய மாநிலம் என்றும், கட்டற்ற ஊழல்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படும் நிலையில், ஆளும்கட்சி அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு கடிவாளம் போட வேண்டும் என்று தங்களது எதிர்பார்ப்பை முன்வைக்கின்றனர். இதை முன்வைத்து, ஆளுநரின் ஆய்வுகள் என்று அதிரடி காட்டும் செயல்பாட்டை பாராட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடிதங்கள் குவிந்து வருகின்றனவாம். 

ஆளுநரை அப்படியே தங்கள் மாவட்டத்துக்கும் ஒரு விசிட் அடிக்கச் சொல்லி கோரிக்கை விடுக்கின்றனராம். தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் குற்றம் குறைகளைக் களைய முயற்சி எடுக்குமாறு கோரிக்கை விடுத்து கடிதங்களை அனுப்பி வருகின்றனராம். இதனை ஆய்வு செய்து, எந்த எந்த மாவட்டங்களுக்குச் செல்லலாம் என்று ஆளுநர் பின்னாளில் தன் மாவட்ட ஆய்வுப் பயணத்தை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. 

click me!