
ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதை வரவேற்பதாக தெரிவிக்கும் ஆட்சியாளர்கள், மனதில் என்ன நினைத்துக்கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
29 லட்சம் மின்மீட்டர்கள் கொள்முதலில், ஒரு மேட்டரை ரூ.453 க்கு அளிக்க தயார் என தெரிவித்த உத்தரப் பிரதேச நிறுவனத்திற்கு டெண்டர் தர மறுத்து அதிக விலைக்கு தருவதாக கூறிய நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கியது யார்? என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே அரசு மீது குற்றம்சாட்டுவதாகவும், மின்மீட்டர்கள் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி இறுதியாவதற்கு முன்பே அரசு மீது தவறான குற்றச்சாட்டை ஸ்டாலின் முன்வைப்பதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தவறான குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை எனவும் மின்மீட்டர்கள் கொள்முதல் டெண்டர் தொடர்பாக அமைச்சர் தங்கமணி விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நியாயவிலைக் கடைகளில் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடைகளின் எதிராக திமுக சார்பில் நடத்த இருந்து, கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போராட்டம் வரும் புதன்கிழமை நடைபெறும் என ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீட்டை வரவேற்பதாக அமைச்சர்கள் தெரிவித்திருப்பது தொடர்பாக, என்ன நினைத்துக்கொண்டு ஆட்சியாளர்கள் இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என ஆதங்கமாக கேள்வி எழுப்பினார்.