யாரைக் காப்பாற்ற விசாரணை ஆணையம்..??? முதல்வர் ஸ்டாலினை வாண்டடா வம்பிழுக்கும் கராத்தே.

By Ezhilarasan BabuFirst Published Nov 16, 2021, 3:34 PM IST
Highlights

அனைத்து பணிகளையும் அதிகாரிகள்தான் மேற்கொண்டனர். உதாரணத்திற்கு  சைதாப்பேட்டை பகுதியில் ஒரு அதிகாரி இருந்தார் என்றால் அந்த பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு அங்கிருந்த அதிகாரியிடம் விசாரித்தால் ஊழல் எப்படி நடந்தது என்று தெரிந்துவிடும்.

ஸ்மார்ட் சிட்டி  ஊழல் விவகாரத்தில் யாரைக் காப்பாற்ற விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும்,  உண்மையான குற்றம் கண்டுபிடிக்கப்பட வேண்டுமெனில் முதலமைச்சர் ஸ்டாலின் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் மேயரும் பாஜக பிரமுகருமான கராத்தே தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். விசாரணை ஆணையம் அமைப்பது காலவிரயத்திற்கு வழி வகுக்கும் என்றும்,  விரைவில் உண்மை தெரியவேண்டும் என்றால் முதலமைச்சர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக கனமழை பெய்ததன் எதிரொலியாக சென்னை தியாகராய நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து களத்தில் இறங்கிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தினார். அமைச்சர்கள் களத்தில் இறங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டதுடன் வெள்ளத்தை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். சென்னையில் தியாகராய நகர், மேற்கு மாம்பலம், கேகே நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைபெற்றது. அதில் நடந்த முறைகேடுகளே தற்போதைய அவல நிலைக்கு காரணம் என்றும் புகார்கள் எழுந்துள்ளது. தியாகராய நகரில் உள்ள பாண்டிபஜார் கடை வீதியை அழகு படுத்தும் விதமாக ஸ்மார்ட்சிட்டி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

சுமார் 120 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் கம்பம், அழகிய சாலை, அகண்ட நடைபாதை, சிசிடிவி கேமரா, வைஃபை வசதி என பாண்டிபஜார் கடைவீதி அழகுற வடிவமைக்கப்பட்டது. இருவழி சாலையாக இருந்ததை ஒரு வழி சாலையாக மாற்றி அமைத்ததுடன், நடைபாதை வியாபாரிகளையும் அப்புறப்படுத்தி அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இரண்டு நாள் மழைக்கே பாண்டி பஜார் சாலை வெள்ளக்காடாக மாறியது, பல நூறு கோடி செலவு செய்து ஸ்மார்ட் சிட்டி திட்டம் மேற்கொள்ளப்படும், இந்த அவல நிலை எப்படி உருவானது என ஒட்டுமொத்த சென்னைவாசிகளுக்கு கொந்தளித்தனர். அந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை, அதில் நடந்த ஊழலே இந்த அவல நிலைக்கு காரணம், அதற்கு உரியவர்கள் தண்டிக்க வேண்டும் என குரல் எழுந்தது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று ரிப்பன் மாளிகையில் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகர தேர்தல் தொடர்பான டிராப்ட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

அதில், பாஜக சார்பில் கலந்துகொண்ட கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர்,தற்போது மழை வெள்ளத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். முதலமைச்சர் அவர்கள் ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். விசாரணை கமிஷன் என்பது கிணற்றில் போடும் கல்லுக்கு சமம் என்பதுதான் பொதுமக்களின் அபிப்பிராயமாக உள்ளது. யாரை காப்பாற்றுவதற்காக அவர் இந்த விசாரணை கமிஷனை அமைக்கிறார் என்று தெரியவில்லை, இதை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். உள்ளாட்சித்துறை அமைச்சராக சென்னை மாநகர மேயராக இருந்திருக்கிறார், ஆனால் எதற்காக விசாரணை கமிஷன் அமைக்கபோகிறார் என்று தெரியவில்லை. கடந்த ஆட்சியில் சென்னையை பொருத்தவரையில் மெஜாரிட்டியாக இடங்களில் திமுகவினரே எம்எல்ஏகளாக இருந்தனர். திமுக எம்எல்ஏக்கள் கொடுத்த பட்டியலில் அடிப்படையில்தான் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டார்.

அனைத்து பணிகளையும் அதிகாரிகள்தான் மேற்கொண்டனர். உதாரணத்திற்கு  சைதாப்பேட்டை பகுதியில் ஒரு அதிகாரி இருந்தார் என்றால் அந்த பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு அங்கிருந்த அதிகாரியிடம் விசாரித்தால் ஊழல் எப்படி நடந்தது என்று தெரிந்துவிடும். அப்போது யார் அதிகாரிகளாக இருந்தார்களோ அவர்களே  இப்போதும் அதிகாரிகளாக உள்ளனர். நான் விசாரித்த மட்டில்  எந்த ஆவணத்திலும் முன்னாள் அமைச்சர் எஸ். பி  வேலுமணியின் கையொப்பம் இல்லை, எல்லாம் அதிகாரிகள்தான் கையப்பமிட்டு இருக்கிறார்கள். அந்தந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள்தான் அந்தந்த அதிகாரிகளை  கேட்டு பெற்றுள்ளனர். அப்படி எனில் அந்த தொகுதியில் வேலை நடக்கவில்லை எனில் அந்த அதிகாரிகள் மீது புகார் கொடுக்க தயாரா.? அதுமட்டுமல்ல விசாரணை ஆணையம் அமைப்பது காலத்தை வீணடிக்கும் செயல், உண்மையான தவறு வெளியில் வர வேண்டும் என்றால் உடனே இது தொடர்பாக சிபிசிஐடி இடம் முதல்வர் புகார் கொடுக்க வேண்டும். அவர்கள் விசாரித்தால் அனைத்து உண்மைகளும் தெரிந்துவிடும். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தயாரா என அவர் கேள்வி எழுப்பினார். 
 

click me!