ஜானகி அம்மாவை போல ஓபிஎஸ்- இபிஎஸ் ஒதுங்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்.. முன்னாள் நிர்வாகி பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Nov 16, 2021, 2:43 PM IST
Highlights

கட்சியை காப்பாற்ற வேண்டுமென்றால் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகிய இருவரும் ஜானகி அம்மா அவர்கள் எடுத்த அதே முடிவை எடுக்கவேண்டும். கட்சிக்கு புது  ரத்தம் பாய்ச்சும் தலைமை வேண்டும், அந்தத் தலைமை சசிகலாவாக கூட இருக்கலாம். 

பெயரளவுக்கு அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக பாஜகவே செயல்படுகிறது என  அதிமுக முன்னாள் நிர்வாகி ஆஸ்பயர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக கரைந்து கொண்டிருக்கிறது என்றும், அதைப்பற்றி ஓபிஎஸ் இபிஎஸ் எந்த கவலைபட்டதாக தெரியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். ஒரு புதிய தலைமை அதிமுகவுக்கு வந்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். 

ஜெயலலிதா காலம் தொட்டு ( 2014 ஆம் ஆண்டு முதல்) நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வரை அதிமுக வின் தொழில்நுட்ப பிரிவுக்கு மாநிலச் செயலாளராக இருந்தார் தொழில்நுட்ப வல்லுநர் அஸ்பயர் சுவாமிநாதன். தமிழ்நாட்டிலேயே தொழில்நுட்ப பிரிவு என்ற ஒன்றை முதன்முதலில் தொடங்கியது அதிமுக தான், அந்தக் கட்சியின் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களின் பொறுப்பை ஆஸ்பயர் சுவாமிநாதன் கவனித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு வகையில் அதிமுகவுக்கு பிரச்சாரம் பலமாக இருந்து வந்தது அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவு எனப்படும் ஐடி விங் என்றால் மிகையல்ல என்றே சொல்லலாம். செல்வி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போதும் சரி, எடப்பாடிபழனிசாமி ஆட்சியாக இருந்தாலும் சரி அரசு செய்யும் நல்ல விஷயங்களை உடனுக்குடன் வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக் என மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து ஆட்சிக்கு நல்ல இமேஜை உருவாக்கி தந்தது ஐடி விங் என்றே சொல்லலாம். 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ்- இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியில் பெரிய அளவில் ஐடிவிங்கால் சோபிக்க முடியவில்லை, இரட்டை தலைமையின் காரணமாக கட்சியே கலகலத்துப் போனது நிலையில், ஐடிவிங்கிலும் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கட்சித் தலைமை மீது பல்வேறு அதிருப்தியில் இருந்து வந்த அதன் பொறுப்பாளர் ஆஸ்பயர் சுவாமிநாதன் தேர்தல் முடிந்த கையோடு அதிமுகவில் இருந்து விலகினார். கட்சியிலிருந்து விலகி விட்டாலும் அவ்வப்போது அதிமுக குறித்தும் அதன் எதிர்காலம் குறித்தும் அவர் சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது அதிமுகவின்  நிலைமை எப்படி இருக்கிறது, அதன் எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பது குறித்து அவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட இரட்டை தலைமையால் தொண்டர்கள் மத்தியில் பெரிய குழப்பம் நிலவிவருகிறது. கட்சிக்குள் முறையான கட்டுக்கோப்பு, ஒருங்கிணைப்பு இல்லை, எதைக் குறித்தும் தலையில் உள்ளவர்கள் கவலைப்படுவதில்லை. மொத்தத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் தலைமையின் கீழ் அதிமுகவில் உள்ள எவருமே மகிழ்ச்சியாகவோ, நிம்மதியாகவோ இல்லை. 

கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் வேறு கட்சிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலவரம் கூட புரியாத தலைமைகளாக இரட்டை தலைமை உள்ளது. ஜெயலலிதா தலைமையில் கீழ்  ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்த அதிமுக தற்போது முற்றிலும் செயலிழந்த அமைப்பாக உள்ளது. கட்சியை காப்பாற்ற வேண்டுமென்றால் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகிய இருவரும் ஜானகி அம்மா அவர்கள் எடுத்த அதே முடிவை எடுக்கவேண்டும். கட்சிக்கு புது  ரத்தம் பாய்ச்சும் தலைமை வேண்டும், அந்தத் தலைமை சசிகலாவாக கூட இருக்கலாம். அப்படி இருந்தால் மட்டுமே இந்தக் கட்சியைக் காப்பாற்ற முடியும் என அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் அதிமுக பெயரளவுக்கு மட்டுமே எதிர்க்கட்சியாக உள்ளது.  ஒரு செயலிழந்த எதிர்க்கட்சியாகவே அது உள்ளது, ரியல் எதிர்க்கட்சியாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த முறையும் பாஜகதான் எதிர்க்கட்சி, அடுத்த முறையும் பாஜகதான் எதிர்க்கட்சி, அதற்கு அடுத்த முறை என்ன என்று பார்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். 
 

click me!