
உக்ரைன்- ரஷ்யாவிற்கு இடையேயான போர் உக்கிரமாக நடைபெற்று வருகிறது. 16 ஆவது நாளாக நடைபெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அங்கு சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலமாக மத்திய அரசு மீட்டு வந்துள்ளது. இதேபோல தமிழக அரசும் டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு மாணவர்களை அழைத்து வந்துள்ளது. இதுவரை உக்கைரனில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 1800க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரும்பியுள்ளனர். ஆனால் கோவையை சேர்ந்த சாய்நிகேஷ் என்ற மாணவன் மட்டும் நாடு திரும்பவில்லை. கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என்பதே சாய் நிகேஷின் விருப்பமாக இருந்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.
இதற்காக இரண்டு முறை இந்திய ராணுவத்தில் தேர்விற்கு சென்றிருந்ததாகவும் உயரம் குறைவு என்பதன் காரணமாக சாய்நிகேஷின் வாய்ப்பானது மறுக்கப்பட்டதாக மாணவனின் பெற்றோர் கூறினர். இந்த நிலையில் படிப்பிற்காக உக்ரைன் சென்ற மாணவன் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் உக்ரைன் ராணுவத்தின் துணை பிரிவில் இணைந்து பணியாற்றி வருவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்திய மாணவர்கள் 90 சதவிகிதம் பேர் நாடு திரும்பியுள்ள நிலையில் சாய்நிகேஷ் மட்டும் நாடு திரும்பாதது மாணவனின் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து தற்போது உள்ள சூழ்நிலையில் உக்ரைனில் இருப்பது சரியில்லையென்றும் நாடு திருப்புமாறு சாய்நிகேஷிடம் பெற்றோர் வலியுறுத்தினர்.
தங்களது கோரிக்கையை ஏற்ற சாய்நிகேஷ்ம் நாடு திரும்ப சம்மதித்துள்ளதாக மாணவனின் பெற்றோர் தற்போது தெரிவித்துள்ளனர். இந்த தகவலை இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்த மாணவனின் பெற்றோர் தூதரக அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக கூறியுள்ளனர்.