ஏமாற்றம் அளிக்கிறது.. ஆளுங்கட்சி மீது அதிருப்தியை வெளிப்படுத்திய கூட்டணி கட்சி..!

By vinoth kumarFirst Published Nov 21, 2021, 7:55 PM IST
Highlights

20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைவாசிகள் குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

தற்போது வெளியிடப்பட்ட அரசாணைகளில் வாழ்நாள் சிறைவாசிகள் முன் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத, மத மோதல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் முன் விடுதலை பெற இயலாது என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என  ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை குறித்துக் கடந்த நவம்பர் 15 அன்று தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண்: 488 பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைவாசிகள் குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

தற்போது வெளியிடப்பட்ட அரசாணைகளில் வாழ்நாள் சிறைவாசிகள் முன் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத, மத மோதல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் முன் விடுதலை பெறஇயலாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாணை எண் 488 விதிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஏழு தமிழர்களின் விடுதலையும் கேள்விக்குறியாகியுள்ளது.

தண்டனை பெற்றவர்களை அவர்கள் சார்ந்த மதங்களுடன் தொடர்புப்படுத்தி வகைப்படுத்துவதற்குச் சட்டத்தில் இடம் இல்லை. எனவே வகுப்புவாத, மத மோதல்கள் எனக் காரணம் கற்பித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கு முன் விடுதலையை மறுத்திருப்பது பெரும்வேதனையை அளித்துள்ளது. அவர்கள் யாரும் பயங்கரவாத தடைச் சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப்படவில்லை.

அரசமைப்பு சட்டத்தின் விதி 161 மாநில அரசுக்கு முன் விடுதலைக்கு நிபந்தனையற்ற உரிமையை அளித்துள்ளது. இந்த விதியை பயன்படுத்தி உடனடியாக தமிழக சிறைச்சாலைகளில் 20ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்துள்ள முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி முன் விடுதலை செய்ய புதிய அரசாணையைத் தமிழக அரசு வெளியிட முதல்வர் ஆவண செய்ய வேண்டும் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

click me!