மதுரையில் எங்க கட்சிக்காரர்தான் மேயர்... அதிமுகவுக்கு ஜெர்க் கொடுக்கும் பாஜக..!

By Thiraviaraj RMFirst Published Nov 21, 2021, 6:54 PM IST
Highlights

அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனக்கு சீட் கொடுக்கும் என நம்பியிருந்தார். ஆனால், கிடைக்கவில்லை. 

மதிமுக, திமுக, பாஜக என 6 ஆண்டுகளில் 5 கட்சிகள் மாறியவர் முன்னாள் எம்.எல்.ஏ.,வான டாக்டர் மதுரை சரவணன். திமுகவில் இருந்தபோது திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனக்கு சீட் கொடுக்கும் என நம்பியிருந்தார். ஆனால், கிடைக்கவில்லை. பசையான பார்ட்டி என்பதால் பாசமாக ஒட்டிக்கொண்ட பாஜக, திமுகவிலிருந்து வந்த வேகத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இவருக்கு சீட்டும் கொடுத்தது. ஆனால், இதில் தோற்றவர், “பேசாமல் திமுகவிலேயே இருந்திருக்கலாம்” என புலம்பிக் கொண்டிருந்தார். 

இந்நிலையில் இவரை மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக அறிவித்து இருக்கிறார்கள். இதனால் பழையபடி குஷியாகிவிட்ட சரவணனின் விசுவாசிகள், ”அண்ணன் தான் மதுரை மேயர் வேட்பாளர்” என தூபம் போட்டு வருகின்றனர்.  கூட்டணி தோழர்களான அதிமுகவினரோ, “இருக்கிற 100 வார்டுல இவங்களுக்கு 4 வார்டு ஒதுக்கினாலே பெருசு. இதுல எப்படி இவங்க மேயர் ஆவுறதாம்” என்று சிரிக்கிறார்கள். பாஜகவினரோ, “அதிமுக சரிப்பட்டு வராட்டி தனியாவே நின்னு மதுரை மேயர் சீட்டை புடிப்போம்” என்று சரவணனுக்கு கொம்பு சீவி வருகிறார்கள்.

 

இது இப்படி இருக்க, மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் டெல்டா மாவட்டங்களுக்கு வந்தபோது, முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஆஜரானார்கள். ஆனால், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் தஞ்சையை விட்டு நகரவில்லை. “சொல்றதையும் கேட்க மாட்றாங்க... சுயமாவும் செயல்படமாட்றாங்க” என்று கட்சித்தலைமை மீது ஏக வருத்தத்தில் இருக்கும் வைத்தி, “இதுக்கெல்லாம் எங்கிருந்து செலவு செய்யுறது?” என்று அலுத்துக் கொண்டாராம். அதனால், வேண்டாவெறுப்பாகவே ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்.

 

மற்ற மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் தலா 2 இடங்களில் மழைச் சேதங்களைப் பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால், வைத்தியின் தஞ்சை மாவட்டத்தில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த இடத்தில் சுமார் 200 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்க வைத்ததோடு, தனது கடமையை முடித்துக் கொண்டார் வைத்திலிங்கம்.

click me!