போலீஸ் எஸ்.ஐ. துடிதுடிக்க வெட்டி படுகொலை.. சட்டம் ஒழுங்குக்கு விடப்பட்ட சவால்.. கொதிக்கும் அன்புமணி..!

By vinoth kumarFirst Published Nov 21, 2021, 7:05 PM IST
Highlights

திருச்சியை அடுத்த பள்ளத்துப்பட்டியில் ஆடு திருடிச் சென்றவர்களை துரத்திச் சென்று பிடிக்க முயன்ற திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அங்குள்ளவர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

ஆடு திருடிச் சென்றவர்களை துரத்திச் சென்று பிடிக்க முயன்ற திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அங்குள்ளவர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

திருச்சி மாவட்டம் மாத்தூர், எஃப் டி, கீரனூர் பகுதியில் ஆடுகள் திருடுபோவதாக தொடர்ந்து புகார் வந்துக்கொண்டிருந்தன. இதனையடுத்து, சனிக்கிழமை இரவு 11 மணியளவில் நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பூமிநாதன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, கையில் மைக், லத்தி மற்றும் துப்பாக்கி இல்லாமல் வெறும் கையோடு, அதுமட்டுமல்ல போலீஸார் பற்றாக்குறையால் தனி ஒருவராக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நவல்பட்டு ரோட்டில் எதிர்ப் புறமாக 3 இருசக்கர வாகனத்தில் 6 பேர் ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களை பூமிநாதன் மறித்த போது நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க துணிச்சலாக விரட்டிச் சென்றுள்ளார். திருச்சி புதுக்கோட்டை மெயின் ரோட்டில் மூகாம்பிகை கல்லூரி அருகில் புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் ரயில்வே சுரங்கப் பாதை பக்கத்தில் பள்ளத்துபட்டி கிராமத்தில் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்றவர்களைப் பிடித்து விட்டார். இதை அறிந்த மற்ற இரண்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்த திருடர்கள் திரும்பி வந்தவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை கத்தி மற்றும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பித்து சென்றனர். இதில், பூமிநாதன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்நிலையில், கொல்லப்பட்ட காவல் அதிகாரியின் குடும்பத்திற்கு அன்புமணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திருச்சியை அடுத்த பள்ளத்துப்பட்டியில் ஆடு திருடிச் சென்றவர்களை துரத்திச் சென்று பிடிக்க முயன்ற திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அங்குள்ளவர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

குற்றங்களைச் செய்த குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற காவல்துறை அதிகாரியே கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது காவல்துறைக்கும், சட்டம் ஒழுங்குக்கும் விடப்பட்ட சவால். இத்தகைய செயல்கள் தடுக்கப்படாவிட்டால்  சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்து விடும்.

கொல்லப்பட்ட காவல் அதிகாரியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு ரூ. 1 கோடி  நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

click me!