டெல்டா மாவட்டங்களில் ஆய்வு… மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Nov 13, 2021, 3:37 PM IST
Highlights

#CMStalin | கடலூர், மயிலாடுதுறை, நாகையை தொடர்ந்து திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். முன்னதாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 7 ஆம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏழாவது நாளான இன்று காலை கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், அரங்கமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மாருதி நகர் பகுதியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், 18 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு 5 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கு தலா ரூ.2,10,000க்கான ஆணை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, ஆடூர்அகரம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ளப் பாதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளாக கனமழையால் பசுமாடு இழந்தவர்களுக்கு தலா ரூ.30,000, கன்றுக்குட்டி இழந்தவர்களுக்கு தலா ரூ.16,000, பகுதியளவு கூரைவீடு சேதமடைந்தவர்களுக்கு தலா ரூ.4,100 என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணத் தொகைகளை வழங்கினார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புத்தூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ளப் பாதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களையும், வெள்ளப் பாதிப்புகளை விளக்கும் புகைப்படங்களையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, தரங்கம்பாடி வட்டம், கேசவன்பாளையம் மீனவர்கள் வாழும் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை முதலமைச்சர் பார்வையிட்டு, வெள்ளப் பாதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமையினை பார்வையிட்டு, மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிலையில் கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகை அருந்தவம்புலத்தில் மழையால் வீடு இடிந்த 5 பேருக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். அதை தொடர்ந்து, திருவாரூர் மாவடத்தில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டார்.

click me!