
ஆளுங்கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக எதிர்க்கட்சிகள் செயல்படுவதுதான் வழக்கம். ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு தினகரன் தான் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.
பிரதான மற்றும் வலுவான எதிர்க்கட்சியான திமுகவை விட, தினகரன் தான் பழனிசாமி ஆட்சிக்கு தினம் தினம் குடைச்சல்களை கொடுத்துவருகிறார். தினகரன் தரப்பு தரும் தொல்லைகளை சமாளிப்பதே ஆட்சியாளர்களின் பிரதான பணியாக மாறிவிட்டது.
டெல்லியின் ஆதரவுடன் பழனிசாமி ஆட்சி நீடிக்கிறது என்றாலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தகுதிநீக்கம் செல்லாது என தீர்ப்பு வருவதற்கே வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியை கவிழ்க்கவோ அல்லது கைப்பற்றவோ தினகரன் திட்டம் தீட்டி வருகிறார். எனவே ஆளும் தரப்புக்கு சவாலாக தினகரன் பெரும் சவாலாக இருப்பதற்கு அந்த எம்.எல்.ஏக்களின் ஆதரவும் ஒரு காரணமாக திகழ்கிறது.
தகுதிநீக்க வழக்கில், எம்.எல்.ஏக்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என முதல்வர் பழனிசாமியிடம் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் அந்த 18 பேரில் 13 பேரை தங்கள் பக்கம் இழுக்க முதல்வர் பழனிசாமி திட்டம் போட்டுள்ளார்.
இதற்காக தற்போதிலிருந்தே தூது அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல மாதங்களாக எம்.எல்.ஏக்களுக்கான பலனை இழந்து விட்டீர்கள். இனிமேலும் தினகரனுடன் இருந்தால் உங்களுக்குத்தான் நஷ்டம். தகுதிநீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்தாலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அப்போதும் உங்களுக்கு இழப்பு தான். எனவே யோசித்து செயல்படுங்கள் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் 5 பேரை தவிர மற்றவர்களிடம் திரைமறைவில் பேசப்படுவதாக தெரிகிறது.
அந்த 18 எம்.எல்.ஏக்களில் 13 பேரை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை காப்பாற்றுவதில் முதல்வர் பழனிசாமி தரப்பு உறுதியாக இருக்கிறதாம்.