
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தை மத்திய அரசு ஒதுக்கி வருவது இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது என்றும் நாடாளுமட்னற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த 1 ஆம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை என அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அலங்கார வார்த்தைகளின் அணி வகுப்புதான் இந்த பட்ஜெட் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் இந்தியாவின் மிகச் சிறந்த பட்ஜெட் இது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ம் பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாள்களை சந்தித்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
பட்ஜெட்டில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தை மத்திய அரசு ஒதுக்கி வருவது இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் தமிழகத்தில் திராவிடத்தை வளர்த்துவிட்டுள்ளனர் என்றும், இக்கட்சியை தேசிய கட்சிகளால் ஒரு போதும் அழிக்க முடியாது என்றும் தம்பிதுரை கூறினார்.
இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்டன் இணைந்து தொண்டர்கள் அதிமுகவை அழிந்துவிடாமல் பாதுகாப்போம் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.