
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க கடந்த 2006-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதாகவும், அதன்மீது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.சௌத்ரி, எழுத்து வடிவிலான பதிலை அளித்துள்ளார். அதில், தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை அறிய, அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு, உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி, கூடி இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும், அதில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதை, மத்திய அரசுக்கு, தலைமை நீதிபதி கடிதம் மூலம் தெரியப்படுத்தியதாகவும் அந்த பதிலில் மத்தியஅமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு, 1997 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். உச்சநீதிமன்ற முழு அமர்வின் முடிவை ஏற்று, தமிழை வழக்காடு மொழியாக ஏற்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தமது பதிலில் மத்திய இணையமைச்சர் பி.பி.சௌத்ரி குறிப்பிட்டுள்ளார்.
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் பதிலை எதிர்பார்த்திருந்த நிலையில் அரசின் இந்த முடிவு தமிழக வழக்கறிஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.