டெல்லியில் ஈபிஎஸ் - ஓபிஎஸ்... டி.வி.யில் ஸ்டாலின்... வாழ்க்கை ஒரு வட்டம் செம சீன்..!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 26, 2021, 1:22 PM IST
Highlights

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்துள்ள அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோன்றும் விளம்பரம் ஒளிபரப்பாகிறது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று தனித் தனியே டெல்லி புறப்பட்டுச் சென்றது தமிழக அரசியல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சி தலைவர் போன்ற வாய்ப்புகள் கையை விட்டு போனதால் அதிருப்தியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என காத்திருந்தார். ஆனால் மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சியான அதிமுகவிற்கு பாஜக இடமளிக்கவில்லை. ஓபிஎஸ் மகனுக்கு பதவி கிடைக்காமல் போனதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. 

இதனால் அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையில் கருத்து வேறுபாடு வெடித்ததாக கூறப்பட்டது. இடையில் சசிகலா ஆடியோ விவகாரம் வேறு சர்ச்சையை கிளப்பியது. அதிமுக தொண்டர்களிடம் சசிகலாவிற்கு செல்வாக்கு கூடியதாக தெரியவே உஷாரான ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஒன்றாக இணைந்து சாட்டையை சுழற்ற ஆரம்பித்தனர். சசிகலாவுடன் தொடர்பில் இருக்கும் அதிமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரித்தனர். 

சமீபத்தில் சசிகலா பேசிய ஆடியோவில் “நான் சீக்கிரம் வந்துவிடுவேன்” என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சசிகலா விவகாரம், உட்கட்சி தேர்தல், அவைத் தலைவர் தேர்வு, மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிக்காதது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அதிமுக தலைமை டெல்லி விரைந்துள்ளது. இன்று பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது அணை, நீட் விவகாரம் குறித்தும் அதிமுகவினர் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரைத் தொடர்ந்து, சேலத்தில் தங்கி இருந்த எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். ஓபிஎஸ் உடன் மனோஜ் பாண்டியன் சென்றுள்ள நிலையில், இபிஎஸ் உடன் எஸ்.பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் சென்றுள்ளனர். 

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்துள்ள அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோன்றும் விளம்பரம் ஒளிபரப்பாகிறது. அதனை தவிர்க்கும் விதமாக ஈபிஎஸ் - ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் வேறு திசையில் பார்வையை செலுத்துவது போன்ற புகைப்படம் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. அதனை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வரும் நெட்டிசன்களோ வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர்த்தும் புகைப்படம் என கமெண்ட் செய்து வருகின்றனர். 
 

click me!