
பீகார்காரர்களுக்கு நம்மை விட மூளை கம்மி என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து திருச்சியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘’பீகார்காரர்களுக்கு நம்மை விட மூளை கம்மி. ஆனால், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், 4,000க்கும் மேற்பட்ட பீகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் தமிழகம் முழுதும் ரயில்வே கேட்டிற்கு கேட் கீப்பராக அவர்களை காணமுடியும். தமிழும் தெரியாது. ஹிந்தியும் தெரியாது. அதற்கு காரணம் அப்போது ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தான். மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சோபிக்கவில்லை. மத்திய அரசு நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை பெற நாம் முயலவில்லை. ரயில்வே, வங்கி உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு பணிகளிலும் பிற மாநில மக்களுக்கு, 10% ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தென் மாநிலங்களை ஒப்பிடுகையில், கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழக இளைஞர்கள் புத்திசாலித்தனம் மிக்கவர்கள். எனவே, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மத்திய அரசு பணிகளுக்கு அதிகளவில் முயற்சிக்க வேண்டும். என்னை கருணாநிதி எப்போதோ எம்.பி., ஆக சொன்னார். எனக்கு ஹிந்தி தெரியாது, ஆங்கிலமும் தெரியாது எனக்கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன். இப்போது வருத்தப்படுகிறேன்” என கூறினார். அவர் பீகார்காரர்களை பற்றி இப்படி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் வியூகம் அமைத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவரே.