நீங்க எழுதலாம், நாங்க எழுதக் கூடாதா? கொந்தளித்த அதிமுக; இறுதியில் நடந்தது இதுதான்!!

By Velmurugan s  |  First Published Jul 15, 2023, 3:38 PM IST

திருப்பத்தூர் அருகே பாலத்தின் பக்கவாட்டு சுவரில் அதிமுக விளம்பரம் எழுதப்படுவதை சாலை பணியாளர்கள் தடுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் வெங்களாபுரம் அருகே திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் பாலம் ஒன்று இருக்கிறது. இதன் பக்கவாட்டு சுவர்களில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடக்க இருக்கும் அதிமுக மாநாடு தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட அதிமுக சார்பாக விளம்பரம் எழுதும் பணி நடந்து கொண்டிருந்தது. 

இந்த நிலையில், திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சீனிவாசன் விளம்பரம் எழுதக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, சாலைப் பணியாளர்கள் சுவர் விளம்பரங்கள் எழுதக் கூடாது என்று தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

Latest Videos

undefined

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அதிமுக நகர செயலாளர்  குமார்,  தெற்கு ஒன்றிய   செயலாளர் திருப்பதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாகேந்திரன் உள்பட நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் வந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

திமுகவினர் மட்டும் உதயநிதி ஸ்டாலின் வருகை தொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பாலங்களில் விளம்பரம் எழுதுகின்றனர். நாங்கள் மட்டும் எழுதக் கூடாதா? ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம், எதிர்கட்சிக்கு ஒரு நியாயமா? என்று கேள்வி எழுப்பினர். திமுகவினர் தங்களது விளம்பரங்களை அழித்தால் நாங்களும் அழிப்போம் என்றனர். எங்களை தடுத்தால் தீக்குளிப்போம், தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரித்தனர். 

இதைத்தொடர்ந்து, எழுதப்பட்ட இடத்தை மட்டும் விட்டு விடுகிறோம் என்று நெடுஞ்சாலை துறை சார்பாக கூறப்பட்டது. இதையடுத்து, அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.

click me!