சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த 15 வயது சிறுமி வாலிபர் ஒருவருடன் சில நாட்களுக்கு முன்பாக மாயமானார். அது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இருவரையும் மீட்டு விசாரித்தனர். அப்போது, சிறுமி பல அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதில், கடந்த சில ஆண்டுகளாக தனது தாயாரின் ஒப்புதலுடன் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சிறுமி ஒருவருடன் சென்ற நிலையில், அவரை மீட்டதால், அந்த கோபத்தில் அவ்வாறு குறிப்பிடுவதாகத் தெரிவித்தார். அதற்கு நீதிபதி சிறுமி அளித்த வாக்குமூலத்தின் மூலம் 2017ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளது தெரியவருகிறது.
சிறுமியின் தாயே அவரது வாழ்க்கையை சிதைத்துள்ளார். ஆகையால், இந்த வழக்கில் விசாரணை முடிந்த பின்னரே, தவறு யார் மீது என தெரியவரும் என தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவித்ததையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.