அதிமுகவின் சதிச்செயல் முறியடிப்பு... வரலாற்றில் ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு... சந்தோஷத்தில் ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Aug 25, 2020, 2:08 PM IST
Highlights

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகம் போற்றுகின்ற வகையிலானது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகம் போற்றுகின்ற வகையிலானது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் தடை செய்யப்பட்ட இந்த புகையிலை பொருட்கள் தாராளமாக தமிழகத்தில் கிடைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை திமுகவினர் கொண்டு சென்று சபாநாயகரிடம் காண்பித்தனர்.

இதையடுத்து திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 21 பேரில் அன்பழகன், கே.பி.பி. சாமி ஆகியோர் இறந்து விட்டனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை அனைத்தும் முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதில், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. சில அடிப்படை தவறுகள் உள்ளதால் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நோட்டீஸ் அனுப்பலாம். மனுதாரர்கள் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டது. 

இந்த தீர்ப்பையொட்டி திமுக தலைவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து, சட்டமன்ற ஜனநாயகத்தை சென்னை உயர்நீதிமன்றம் காப்பாற்றி இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும், மக்களை வெகுவாகப் பாதிக்கும் பிரச்சினைகளையும் சட்டமன்றத்தில் எழுப்பும் உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்றத் தவறி விட்டாலும், சென்னை உயர்நீதிமன்றம் அந்த உரிமையை சட்டப்பூர்வமாகப் பாதுகாத்து இருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது.

கேன்சரை உருவாக்கும் குட்கா விற்பனையைத் தாராளமாக அனுமதித்து அதில் பங்கேற்ற அ.தி.மு.க. அரசின் குட்கா ஊழலை நாட்டு மக்களுக்குத் தெரிவித்திடவே குட்கா பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றதை மறைத்து, நீதி வழுவிய முறையில் பேரவைத் தலைவர் மூலமாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பிய சதிச் செயலில் இறங்கியது அ.தி.மு.க. அரசு. அதை இந்தத் தீர்ப்பு தகர்த்தெறிந்து இருக்கிறது. சட்டமன்ற வரலாற்றில் ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனதார வரவேற்று மகிழ்கிறேன்.

குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய அமைச்சர் மீது தமிழக முதலமைச்சர் பழனிசாமி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், இன்னும் குட்கா விற்பனை தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது என்பதும் கசப்பான உண்மை மட்டுமல்லாமல்; தமிழகத்திற்கும் தலைகுனிவு ஆகும். தடை செய்யப்பட்ட போதைப்பொருள் தாராளமாக விற்கப்படுகிறது என்பதை அம்பலப்படுத்திய எதிர்க்கட்சியின் மீது உரிமை மீறல் விதியை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்குப் பாய்ந்த அரசு, குட்கா விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் பதுங்கி விட்டது. அதனால் குட்கா எனும் சமூகத் தீமையின் போக்குவரத்தும் விற்பனையும் கொடிகட்டிப் பறக்கிறது என தெரிவித்துள்ளார்.

click me!