
தென் இந்திய திரைப்படங்களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா, ரஜினி,பிரபு,பிரசாந்த், விஜய் உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்திருந்தார். அரசியல் மேல் ஆர்வம் காரணமாக தன்னை முழு அரசியல் வாதியாக மாற்றிக்கொண்டார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மக்கள் பிரச்சனைகளுக்காக ஆர்வம் செலுத்தி பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டார். இதனையடுத்து அங்கு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று நகரி சட்டமன்ற உறுப்பினரானார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு 1000 தமிழ் பாட புத்தகங்கள் தேவைப்படுவதாக கூறி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்தார். முதலமைச்சரை சந்தித்து சென்ற சில மணி நேரத்தில் இதற்கான உத்தரவை தமிழக முதலமைச்சர் வெளியிட்டார். இதனால் ஆச்சர்யம் அடைந்த நடிகை ரோஜா, முதலமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்படுவதாக பாரட்டு தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சென்ன கிழக்கு மாவட்ட திமுக சார்பாக புரசைவாக்கம் தானே தெருவில் நடைபெற்ற நிகழ்வில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு முதலமைச்சரை வாழ்த்தி பேசினர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சுசி கணேசன்,நகைச்சுவை நடிகர்கள் பாஸ்கர், மயில்சாமி ,திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே செல்வமணி மற்றும் நடிகை ரோஜா கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ரோஜா, அறநிலையத்துறைக்கு அமைச்சராக சேகர்பாபு பதவியேற்ற பிறகுதான் அந்த துறையின் பவர் என்ன என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளதாக கூறினார்.மேலும் அரசுக்கு நிதி கொடுக்கும் துறையாக அறநிலையத்துறை மாறியுள்ளதாவும் தெரிவித்தார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டதாக தெரிவித்தவர், மு.க.ஸ்டாலினும், ஜெகன் மோகன் ரெட்டியும் அண்ணன்,தம்பி போல பழகியதாக கூறினார். . தொடர்ந்து பேசியவர், தனக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் பழக்கமே இல்லையென்று தெரிவித்தவர், தனது தொகுதி தமிழ்நாடு எல்லையில் உள்ளதால் முதலமைச்சரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார். இதற்காக முதலமைச்சருடன் அப்பாயிண்ட்மெண்ட் கேட்பதற்காக முயற்சி செய்ததாக தெரிவித்தவர், வெள்ளிக்கிழமை சந்திக்க அனுமதி கேட்ட நிலையில் சனிக்கிழமை தன்னை போனில் அழைத்து திங்கட்கிழமை வந்து சந்திக்குமாறு தெரிவித்ததாக கூறினார்.
இந்தநிலையில் தான் திங்கட்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க புறப்பட்ட போது கோயில் சென்று திரும்பும் போது அரை மணி நேரம் தாமதமாகிவிட்டதாக கூறினார். இதனால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ரத்து செய்துவிடுவார்களோ என தானும் ஆர்.கே.செல்வமணியும் அஞ்சியதாக தெரிவித்தார். இருந்த போதும் முதலமைச்சர் தங்களுக்காக அரை மணி நேரம் காத்திருந்ததாகவும், இதனையடுத்து தங்களிடம் அன்பாக முதலமைச்சர் பேசியதாகவும், அப்போது தமிழக மாணவர்கள் பிரச்சனை தொடர்பாக எடுத்து கூறியதாக தெரிவித்தார். இதனையடுத்து தலைமைசெயலகத்தில் இருந்து நகரி செல்வதற்குள் மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்குவதற்கான அனுமதி கிடைத்து விட்டதாக தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்படுவதாகவும் கூறினார். எனவே இது போன்ற முதலமைச்சர் தமிழக மக்களுக்கு கிடைத்திருப்பது லக்கி என கூறினார்.