
டெல்லியில் பிரதமரை சந்தித்த ஸ்டாலின்
டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா கலைஞர் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 ஆம் தேதி திறந்து வைத்தார். இதற்காக கடந்த 30 ஆம் தேதி இரவு டெல்லி சென்றடைந்தார். மறுதினம் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களுக்கு நிதி வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் டெல்லி பயணம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று மோடி, அமித்ஷா காலில் விழ போவதாக தெரிவித்திருந்தார். மேலும் கோ பேக் மோடி என கூறிவிட்டு பிரதமரை சந்தித்த ஸ்டாலின் சென்றுள்ளதாகவும் கூறியிருந்தார்.
யார் காலிலும் விழவில்லை
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பேசியிருந்தார். அதில், டெல்லிக்குப் பயணம் சென்று, மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து பிரதமர் இடத்திலும் மத்திய அமைச்சர்களை சந்திக்கு கோரிக்கை மனுக்களையும் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத சிலர் தான், நான் ஏதோ அச்சத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிற என்னை அதிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக டெல்லி போனேன் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார். பதவியேற்றபோதே நான் சொன்னேன் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்றுதான் சொல்லியிருக்கிறேன். நான் கருணாநிதியின் மகன். என்றைக்கும் தமிழ்நாட்டுக்காக உழைப்பேன் என்று தெரிவித்தார்.மேலும் என்னை விமர்சிப்பவர்களுக்கு ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன். அங்கு சென்று யாருடைய காலிலும் விழுந்து, இதை எனக்கு செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் நான் போனேனே தவிர, வேறு அல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்,
யாருக்கு காவடி தூக்கி சென்றார் ஸ்டாலின்
இந்தநிலையில் கோடை வெயிலில் இருந்து மக்களை காக்கும் வகையில் சேலத்தில் நீர், மோர் பந்தலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி துவக்கிவைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் இருந்த போது டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த போது அதிமுக பாஜகவிற்கு காவடி தூக்கிச் சென்றது என்றும் அதிமுக பாஜகவிற்கு அடிமையாக உள்ளதாகவும் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்ததாகவும் கூறினார். இப்போது முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் இப்போது எந்த வகையில் பிரதமர் மோடியையும் மற்ற அமைச்சர்களும் சந்தித்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே எந்தக் காவடி தூக்கிக் கொண்டு சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை ஸ்டாலின் சந்தித்தார் என விமர்சித்தார். மேலும் அதிமுகவைப் பொறுத்தவரை எப்போதும் மத்திய அரசோடு இனக்கமான உறவு வைத்திருக்க வேண்டும் என்றுதான் நினைப்பதாக தெரிவித்தவர், அப்போது தான் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றமுடியும் என கூறினார்.
அரசியல் நாகரிகம் கற்றுக்கொள்ள வேண்டும்
துபாயில் இருந்து வந்தவுடன் முதலமைச்சர் டெல்லி சென்றதாக தெரிவித்தவர், தங்கள் பிரச்சனையை தீர்த்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ளதாக கூறினார். துபாய் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு தமிழகத்திற்கு முதலீடு ஈர்க்க சென்றாரா? அல்லது தங்களது குடும்ப உறுப்பினர் தொழில் தொடங்குவதற்காக துபாய் சென்றாரா என பொதுமக்கள் பேசி கொள்வதாக தெரிவித்தார். எனவே மத்திய அரசு தங்கள் மீது எதாவது நடவடிக்கை எடுத்து விடுவார்களோ என்று அச்சத்தால் தான் உடனடியாக டெல்லிக்கு சென்றதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாசல் வரை வந்து முதலமைச்சர் ஸ்டாலினை வழியனுப்பி வைத்தாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளதாக கூறிய அவர், இதில் இருந்து அரசியல் நாகரிகத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். தங்களை கோ-பேக் என கூறியவர்களை மரியாதையோடு பாஜக நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.