
விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை தமிழகத்திலும் இருப்பதால் இலங்கையின் நிலைமை தமிழ்நாட்டிற்கு வரும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பால், அரிசி, காய்கறிகள் என அத்தியாவசிய பொருள்கள் அனைத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர். இலங்கை முழுவதிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே இலங்கையை போன்று தமிழகத்திலும் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை வரும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நில அபகரிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாரந்தோறும் திங்கட்கிழமையன்று வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இரண்டாவது முறையாக இன்று காலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மத்திய குற்றப்பிரிவில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லா துறைகளிலும் நிர்வாக சீர்கேடு உள்ளது. அதன் வெளிப்பாடு தான் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியானது. வினாத்தாள் வெளியாவது தொடர்கதையாகி விட்டது. திமுக ஆட்சிகாலத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. திமுக நிர்வாகிகள் தவறு செய்தால் கடுமையாக நடவடிக்கைகள் எடுக்காமல் பெயரளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
அதன் விளைவாக திருவொற்றியூர் எம்.எல்.ஏ கேபி சங்கர் மீண்டும் பார் உரிமையாளரை மிரட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. திமுக தலைமை கழகம் கட்டுப்பாட்டில் கட்சி தொண்டர்கள் இல்லை சட்டம் ஒழுங்கு பிரச்சனை, விலைவாசி உயர்வு என அனைத்து பிரச்சனைகளும் தமிழ்நாட்டில் நிலவுவதால் இலங்கையை போன்று தமிழகத்திலும் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை உண்டாகும். அம்மா உணவகம், லேப்டாப் உள்ளிட்ட அதிமுக திட்டங்களை அழிப்பது போல தாலிக்கு தங்கம் திட்டத்தை அழிக்கின்றனர். 14 லட்சம் பெண்கள் அத்திட்டத்தால் பயன்பெற்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.