
அமெரிக்காவில் இருந்து திரும்பிய தம்பதி கொலை
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(65) மற்றும் அவரது மனைவி அனுராதா(60). அங்கிருக்கும் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர். இந்த தம்பதியின் மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் மருத்துவர்களாக இருக்கின்றனர்.மகள் நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததால் கடந்த ஆறு மாத காலமாக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில், ஸ்ரீகாந்தும், அனுராதாவும் தங்கியிருந்துள்ளனர். இதனையடுத்து தனது மகள் பிரசவம் முடிவடைந்ததையடுத்து நேற்று முன் தினம் சென்னை திரும்பியவர்களை ஶ்ரீகாந்த் வீட்டில் பல வருடங்களாக பணியாற்றி வந்த ஓட்டுநர் கார் மூலம் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மயிலாப்பூர் வீட்டில் வைத்து ஶ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை தனது நண்பர் உதவியோடு கொலை செய்த கார் ஓட்டுநர், வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளார். நிலம் விற்பது தொடர்பாக ஶ்ரீகாந்த் வீட்டில் 40 கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் இருப்பதை ஸ்ரீகாந்த் தம்பதி பேசியதாக கூறப்படுகிறது. இதன்மீது ஆசைப்பட்ட ஓட்டுநர் லால் கிருஷ்ணா, சென்னை திரும்பிய அந்த தம்பதியை கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் வீட்டில் எதிர்பார்த்த அளவிற்கு பணம் இல்லாத நிலையிலும் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
ரூ.40 பணத்திற்காக கொலை
இந்த நிலையில் தனது தாய் மற்றும் தந்தை தொலைபேசி அழைப்புகளை எடுக்காத காரணத்தால் தனது உறவினர்களை வீட்டிற்கு சென்று பார்க்கும் படி கூறியுள்ளனர். இதனையடுத்து வீட்டில் வந்த பார்த்த போது வீடு முழுவதும் டெட்டால் ஊற்றி வீடு கழுவப்பட்டது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட சந்தேகத்தில் போலீசாரிடம் உடனடியாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார் நேபாளத்திற்கு தப்பி சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். இந்த பிரச்சனை தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. தமிழக சட்டப்பேரவையில் உள்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், நகை பணத்திற்காக கொலை சம்பவம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். சென்னை மயிலாப்பபூரில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் பேசினார்.
6 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது
இதற்கு பதில் அளித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். ஆந்திரப்பிரதேச காவல்துறையினர் உதவியுடன் கார் ஓட்டுநர் மற்றும் அவருடைய கூட்டாளி கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். இது முழுக்க முழுக்க ஆதாயக் கொலை என கூறினார். மேலும் குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீட்டில் கொலை செய்யப்பட்டவர்கள் உடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், புகார் அளித்த 6 மணி நேரத்தில் தப்பிச்சென்ற கொலையாளிகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய உறுதுணையாக இருந்த அனைத்து காவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.