
திருமணம் செய்ய விருப்பம் இல்லாத காரணத்தால் தாலி கட்டிய கணவனை திருமணம் ஆன 35 நாளில் இளம்பெண் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெலங்கானா மாநில்த்தில் நடந்துள்ளது.
சமீபகாலமாக காதல், கள்ளக்காதல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்தல், காதலனுக்காக வருங்கால கணவனை தீர்த்துக் கட்டுவது போன்ற செயல்களில் பெண்கள் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது. சமீபத்தில் இளம் பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத காரணத்தால் எதிர்கால கணவனின் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல தெலுங்கானா மாநிலத்தில் சித்தி பேட்டை மாவட்டத்தில் மற்றொரு இளம் பெண் தனது காதலனுக்காக தாலி கட்டிய கணவனை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இருவருக்கும் திருமணம் நடந்து 35 நாட்களுக்குப் பிறகு இந்த கொடூர கொலை நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து சித்திப்பேட்டை போலீசார் தெரிவித்திருப்பதாவது,
தான் காதலித்து வந்த நிலையில் வேறு ஒருவரை குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். காதலனை விட்டுப் பிரிய மனமில்லாத அந்தப் பெண் தாலிக் கட்டிய புதுக் கணவனை தீர்த்துக் கட்டியுள்ளார். முதலில் உணவில் எலி மருந்து கலந்து கொடுத்தார் அதை சாப்பிட்ட கணவன் ஆபத்தான நிலைக்கு சென்று எப்படியோ அதில் இருந்து குணமாகி வந்த நிலையில், திரும்பவும் அந்த இளைஞரை கொலை செய்ய அந்தப் பெண் திட்டமிட்டார், வெளியூருக்கு அழைத்துச் சென்று தனது காதலன் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து நடு காட்டிர் வைத்து கொலை செய்துள்ளனர். நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக நாடகமாடிய நிலையில் கொலை நடந்த ஒரு சில நாட்களுக்குள் உண்மை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொகுடா மண்டலம், குடிகண்டுலாவை சேர்ந்தவர் சியாமளா(19) இவருக்கும் துப்பாக்க மண்டலம் சின்ன நிஜாம் பேட்டையை சேர்ந்த கோனபுரம் சந்திரசேகர் 24 என்பவருக்கும் கடந்த மார்ச்சு 23ஆம் தேதி திருமணம் நடந்தது.
சந்திரசேகர் விவசாயம் செய்து வந்தார், ஆனால் சியாமளா குடிகொண்டுள்ளவை சேர்ந்த தனது சிறு வயது நண்பனான சிவக்குமார் என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் அவரின் விருப்பத்திற்கு மாறாக அவரது குடும்பத்தினர் அவருக்கு சந்திரசேகர் உடன் திருமணம் செய்து வைத்தனர். கணவன் சந்திரசேகர் தனக்கு ஏற்றவராக இல்லை, வசதியாக இல்லை என்ற மனக்குறை சியாமளாவுக்கு ஏற்பட்டது. இதனால் கணவனை தீர்த்துக் கட்ட அவர் முடிவு செய்தார். கணவனை தீர்த்துக் கட்ட காதலன் சிவாவின் உதவியை நாடினார். ஏப்ரல் 19ம் தேதி சந்திரசேகருக்கு உணவில் எலி மருந்து கலந்து கொடுத்தார். அதை சாப்பிட்ட சந்திரசேகர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற அவர் ஏப்ரல் 22ஆம் தேதி சுகமாகி வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவரை கொலை செய்ய மனைவி சியாமளா திட்டமிட்டார்.
இந்நிலையில் காதலன் சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டார். இந்நிலையில் கணவன் சந்திரசேகரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார், அங்கு நடுவழியில் காட்டுப் பகுதியில் ஏற்கனவே தயாராக இருந்த அவரது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் சந்திரசேகரை சரமாரியாக தாக்கினர், டவலைவைத்து சந்திரசேகரின் கழுத்தை நெரித்து கொன்றனர். சந்திரசேகரின் உடலை காரில் சித்திபேட்டை புறநகர் பகுதிக்கு கொண்டு வந்தனர் சியாமளா சந்திரசேகரின் குடும்பத்திற்கு போன் செய்து கணவருக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும், மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக கூறினார். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வாகனத்தில் சித்தி பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத்தினர் வந்து பார்க்கும்போது சந்திரசேகர் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் கூறினர். குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
ஆனால் சந்திரசேகரின் தாய்க்கு மகன் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் மனோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மருமகள் மீது சந்தேகம் ஏற்பட்டது அவரது தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்ததில் சிவகுமாரிடம் பலமுறை அவர் பேசியது தெரிந்தது. பின்னர் அவரை பிடித்து விசாரித்ததில் கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலைக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.