இன்னாருக்கு இதுதான் என்று சொல்வது ஆரியம், எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது தான் திராவிடம். இந்த வித்தியாசத்தை ஆளுநர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேவர் குருபூஜை- முதலமைச்சர் மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முத்துராமலிங்க தேவரின் நினைவை போற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளதாக கூறினார். முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக முதலமைச்சராக இருந்தபோது கருணாநிதி நடத்தினார்.
தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கு அமைத்து தந்தவரும் கலைஞர் தான், மதுரையில் தேவருக்கு சிலை அமைத்ததும் கலைஞர் அவர்கள் தான், இந்த விழாவை அரசு விழாவாக நடத்தி அப்போதைய குடியரசுத் தலைவரை வி வி கிரியை அழைத்து வந்து விழாவை நடத்தியதாக குறிப்பிட்டார்.
மீனவர்களை மீட்க நடவடிக்கை
இதனை தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது சம்பவம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகவே நடைபெற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு உடனடியாக கடிதம் எழுதி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளியுறவுத் துறை அமைச்சரையும் தொடர்பு கொள்கிறோம், பிரதமருக்கும் கடிதம் எழுதி உள்ளோம். இன்றைய தினம் கூட நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலுவை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
மத்திய அமைச்சரை சந்தித்து மீனவர் பிரச்சினை பேசுமாறு கூறியுள்தாக தெரிவித்தார். திராவிடம் என்ற ஒன்று இல்லையென ஆளுநர் ரவி கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், இன்னாருக்கு இதுதான் என்று சொல்வது ஆரியம், எல்லாருக்கும் எதுவும் உண்டு என்று சொல்வது தான் திராவிடம். இந்த வித்தியாசத்தை ஆளுநர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜக அலுவலகமாக மாறிய ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் கொண்டு வீசப்படவில்லை தெருவில் தான் வீசப்பட்டது. இதோட சிசிடிவி காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை சார்பாக போட்டுக் காண்பிக்கப்பட்டு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு இந்த பொய்யான செய்தி பரப்பப்படுகிறது. ஆளுநர் பாஜக கட்சியினராக மாறிவிட்டார். ஆளுநர் அலுவலகம் பாஜக கட்சி அலுவலக மாறிவிட்டது இதுதான் வெட்கக்கேடு என ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
பொய்யான தகவலை வெளியிடுவதா.? நேருக்கு நேர் விவாதிக்க தயாரா.? அண்ணாமலைக்கு சவால் விட்ட கொங்கு ஈஸ்வரன்