மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையால் முற்றிலும் மனமுடைந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மணிப்பூர் கலவரம்- பெண்கள் கற்பழிப்பு
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இருந்த போதும் அங்கு இரு பிரிவு மக்களிடம் மோதல் தொடர்ந்து கொண்டு வருகிறது. இந்தநிலையில், மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் குழு ரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 20 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் தப்பி ஓடிய நிலையில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரர் அந்த கொடூர தாக்குதலை தடுத்த நிறுத்த முற்பட்டபோது வன்முறை கும்பலால் அடித்து கொல்லப்பட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நமது கூட்டு மனசாட்சி எங்கே போனது?
இந்த கொடூர சம்பவம் மே 4ம் தேதி நடந்தநிலையில் தற்போது அந்த வீடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையால் முற்றிலும் மனமுடைந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளேன். நமது கூட்டு மனசாட்சி எங்கே போனது?
வெறுப்புணர்ச்சியும் நச்சும் மனிதத்தன்மையின் ஆன்மாவையே அசைத்துப் பார்க்கின்றன. இதுபோன்ற கொடுஞ்சியல்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இரக்கமும், மரியாதையும் கொண்ட ஒரு சமூகத்தை வளர்த்தெடுப்பதை நோக்கிப் பணியாற்ற வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்