காய்கறி உள்ளிட்ட அத்தாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.
விலைவாசி உயர்வு
தமிழகத்தில் கடந்த சில மாதமாக காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. விலை உயர்வு காரணமாக ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புள்ளாகி வருகின்றனர். விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய, அரசு துறைகளில் ஊழல்களை கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்தும் , முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்தும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பிற்கிணங்க, இன்று மாநிலம் முழுவதும் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
காய்கறி விலை அதிகரிப்பு
சென்னை மற்றும் சென்னை புறநகரில் அமைப்பு ரீதியாக செயல்படும் 9 மாவட்டங்கள் இணைந்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், . திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டு காலத்தில், தமிழ் நாட்டில் மக்கள் வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது. மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும்; துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகளும் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக போராட்ட அறிவிப்பு
விலைவாசி உயர்வு காரணமாக, சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.தமிழ் நாட்டு மக்கள் 10 ஆண்டு காலமாக மறந்து போயிருந்த மின்வெட்டு, நிர்வாகத் திறனற்ற விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு, குறு தொழில் முனைவோர் செய்வதறியாது கலங்கி நின்ற நேரத்தில், மூன்று மடங்கிற்கும் மேலான மின்கட்டண உயர்வு என்ற பேரிடியை இறக்கியது இந்த விடியா திமுக அரசு என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
இதையும் படியுங்கள்
திமுக அரசை விடாமல் தாக்கும் அதிமுக..! அடுத்த போராட்டத்திற்கு தேதி அறிவித்த எடப்பாடி பழனிசாமி