MK STALIN: எந்தக் கொம்பனாக இருந்தாலும் சரி.. இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்! எச்சரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

By Raghupati R  |  First Published Mar 4, 2023, 11:45 PM IST

சட்டம் ஒழுங்கைக் கெடுக்கின்றவர் எந்தக் கொம்பனாக இருந்தாலும் சரி, இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ப.மாணிக்கம் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “உலகில் தலைசிறந்த மனிதர்களை 'மாணிக்கம்' என்பார்கள்.

'மனிதகுல மாணிக்கம்' என்றுகூட பண்பு நிறைந்த மனிதர்களை அழைத்துப் போற்றுவார்கள். அந்த வகையில் பிறக்கும்போதே மாணிக்கமாக பிறந்தவர்தான் தோழர் ப.மாணிக்கம் அவர்கள். மாமனிதர் மாணிக்கம் அவர்களுடைய நூற்றாண்டு விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாமெல்லாம் பெருமைப்படத்தக்க வகையில் எழுச்சியோடு, ஏற்றத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Latest Videos

இந்த விழாவில் பங்கெடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கு நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன், பூரிப்படைகிறேன். அதிலும், இன்னொரு மனிதகுல மாணிக்கமான தோழர் அய்யா நல்லகண்ணு அவர்கள் இந்த மேடையில் நம்மோடு இருக்கிறார்கள். தியாகத்தின் திருவுருவாக இருக்கின்ற தோழர் அவர்கள் வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம் என்பதே நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை.

இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்

இத்தகைய தீரமிக்க தியாகிகளின் இயக்கம்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி வளரக் காரணம் அதனுடைய கொள்கைகள் மட்டுமல்ல, இதுபோன்ற தன்னலமற்ற தலைவர்களினால்தான். தலைவர் கலைஞர் அவர்களோடு மிக மிக நெருக்கமான நட்பைப் பேணி பாதுகாத்தவர் தோழர் மாணிக்கம் அவர்கள்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு தோழர் மாணிக்கம் அவர்கள் 1999-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் நாள் மறைந்தார் என்று கேள்விப்பட்டதும் உடனடியாக அவரது குரோம்பேட்டை வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள். தமிழ்நாட்டைச் சேர்த்து புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். அய்யா ஆசிரியரும் நம்முடைய முத்தரசன் அவர்களும் குறிப்பிட்டுச் சொன்னார்களே, நாற்பதும் நமதே, நாடும் நமதே - என்று சொல்லி இருக்கிறேன்.

தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுமைக்கும் நம்முடைய கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். மதவாத - வகுப்புவாத - எதேச்சதிகார சக்திகள் வீழ்த்தப்படவேண்டும். இதனை என்னுடைய பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.

இதையும் படிங்க..பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வேலைவாய்ப்பு.. 281 காலியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி.?

தமிழ்நாட்டைப் போன்ற ஒற்றுமை அனைத்து மாநிலங்களிலும் உருவானால்தான் வெற்றி பெற முடியும். வெறும் கையிலே முழம் போடக் கூடாது - என்பார்கள். எனவே, ஒற்றுமைக் கரங்கள் சேராமல் வெற்றிக் கனியை நாம் பறிக்க முடியாது. 2024 தேர்தல் என்பது வெறும் தேர்தல் அல்ல. அது ஒரு கொள்கை யுத்தம்.

பீகார் மாநிலத்திலிருந்து வந்து இங்கு தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய, பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய, தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கக்கூடிய சிலரை எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல் லாபம் தேட நினைக்கக்கூடியவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன். இன்று காலையில்கூட பீகார் மாநிலத்தினுடைய முதலமைச்சர் நிதீஷ்குமார் அவர்களிடத்தில் நான் தொலைபேசியில் பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.

எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் எவ்வளவு பிளவை ஏற்படுத்த நினைத்தாலும் ஒருக்காலும் இந்தக் கூட்டணியை நீங்கள் பிளவுபடுத்திட முடியாது என்பதை மாத்திரம் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி, யார் சட்டம்-ஒழுங்கை கெடுக்கின்ற சூழ்நிலையில் ஈடுபட்டாலும் அவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும் அவனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்! அடக்குவோம்! என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் உறுதிசொல்லி, தோழர் ப.மாணிக்கம் அவர்களுடைய புகழ் என்றைக்கும் நிலைத்து நிற்க வேண்டும்” என்று பேசினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

இதையும் படிங்க..AIADMK: அகம்பாவம்.. ஆணவம்.! அதிமுகவின் தோல்விக்கு துரோகி எடப்பாடி தான் காரணம் - கொந்தளிக்கும் ஓபிஎஸ்

click me!