பிரதமர் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலினின் பெயர் அடிபடுவதில் எந்த தவறும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மதுரை கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அணிகள் இன்னும் அமையவில்லை. அணிகள் அமைந்த பின்பு தான் தேர்தல் குறித்து கணிக்க முடியும். வட கிழக்கு மாநிலங்கள் தேர்தல் முடிவுகளை வைத்து இந்திய பொதுத் தேர்தலை கணிக்க முடியாது.
தமிழ்நாட்டில் நடக்கும் இடைத்தேர்தல் என்பதற்கு ஒரு இலக்கணம் உண்டு. அதில் பெரும்பாலும் ஆளுங்கட்சியினருக்கு தான் இடைத்தேர்தல் முடிவுகள் ஆதரவாக இருக்கும். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் ஒரு உத்வேகம் தான். எதிர்க்கட்சியினருக்கு இது ஒரு பின்னடைவு.
undefined
இந்திய அளவில் பாஜகவை எதிர்த்து ஒரு கூட்டணி அமைய வேண்டும் என்றால் அந்தக் கூட்டணிக்கு அச்சாரமாக காங்கிரஸ் இருக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையில் தான் அந்த கூட்டணி அமைய வேண்டும் என்று முதல்வர் கூறிய கருத்து சரியான கருத்து. அரசியல் நிலையை புரிந்து கொண்டு முதல்வர் கூறிய கருத்து. அதை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன்.
பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் ஸ்டாலின் பேசப்படுவதில் தவறு கிடையாது. மாநில முதல்வராக இருந்தவர்கள் இந்தியாவிற்கு பிரதமராக பொறுப்பு வகித்துள்ளார்கள். ஏன் நரேந்திர மோடி கூட பிரதமராகியுள்ளார். ஒரு மாநில முதலமைச்சர் இந்தியாவிற்கு பிரதமராக வேண்டும் என்று அக்கட்சி எண்ணுவது எந்தவித தவறும் இல்லை.
புல் டவுசரை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் இது போன்ற கொச்சையான கருத்துக்களை தான் பேசுவார்கள். ஒரு மாநிலத்தின் முதல்வர் அதுவும் இந்திய அளவில் ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வரை மாநில எல்லைக்கு தாண்டி தெரியாது என்றால் பொது அறிவு இல்லாதவர்கள் தான் அப்படி சொல்வார்கள்.
ராகுல் காந்தியின் விடா முயற்சியில் காங்கிரஸ் கட்சி பலப்படுத்தப் பட்டுள்ளது. வரும் கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி கட்டாயம் ஆட்சி அமைக்கும். 70 ஆண்டுகளாக இந்தியாவில் எந்த ஒரு சாதனையும் நடக்கவில்லை. நான் பிரதமரான பின்பு தான் சாதனைகள் நடந்துள்ளது என பிரதமர் மோடி அடிக்கடி பேசுவார். நாங்கள் தொடங்கிய திட்டத்தை அவர்கள் நடத்துகிறார்கள் என்றார்.