
நேற்று இரவு கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், இன்று காலை 11. 00 மணிக்கு ‘வ.உ.சி’ மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர், இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதன்பின், இன்று இரவு கோவையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை 23-ம் தேதி காலை, 11. 00 மணிக்கு கொடிசியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதன்பின், தனி விமானத்தில் சென்னை செல்கிறார்.
கோவை மற்றும் திருப்பூருக்கு முதல்வர் ஸ்டாலின் வருவதையொட்டி விமானநிலையம், வ. உ. சி மைதானம் என கோவை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் வருகையால் இன்று கோவையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கவனித்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கோவை வருவதை முன்னிட்டு, கோவை மாநகர பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
கோவை வ. உ. சிதம்பரனார் மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி , ஆ. ராசா எம்.பி, வனத்துறை அமைச்சர் க. ராமச்சந்திரன் , திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிசாமி அவர்கள், கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பையா (எ) கிருஷ்ணன்,கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு. S. சேனாதிபதி ஆகியோர் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.