விழித்திரு... விலகி இரு... வீட்டில் இரு... கொரோனாவுக்கு எதிராக முதல்வர் எடப்பாடியின் ஸ்லோகன்!

By Asianet TamilFirst Published Mar 25, 2020, 9:35 PM IST
Highlights

தமிழக முதல்வராக இல்லாமல் உங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக நான் பேசுகிறேன். 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடரங்கு என்பது விடுமுறை நாள் அல்ல. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும் அரசின் உத்தரவு. இந்த உத்தரவை சாதி, மதம், இனம், வேறுபாடு இன்றி அனைவரும் ஏற்று கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்.
 

கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இந்தியாவையும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவில் இந்நோயால் 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவருவதால், இந்தியாவில் 21 நாட்களுக்கு லாக் டவுன் செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி தமிழகத்தில் நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.    
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை பின்பற்றும்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக முதல்வராக இல்லாமல் உங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக நான் பேசுகிறேன். 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடரங்கு என்பது விடுமுறை நாள் அல்ல. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும் அரசின் உத்தரவு. இந்த உத்தரவை சாதி, மதம், இனம், வேறுபாடு இன்றி அனைவரும் ஏற்று கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்.


கொரோனா வைரஸ் பாதிப்பை ஒழிக்க போர்க்கால  நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ. 3850 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 10,518 படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. எனவே மக்களின் ஒவ்வொருவடைய ஒத்துழைப்பும் அரசுக்கு அவசியம் தேவைப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையில்லாமல் கிடைக்கும். எனவே மக்கள் கூட வேண்டாம். ரேசன் கடைகளில் ஏப்ரல் மாத பொருட்கள் விலையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பாதிப்பை அகற்ற சமூக விலகலே முக்கியம். எனவே வெளியில் பொருட்கள் வாங்க செல்லும்போது 3 அடி தூர இடைவெளியை கடைபிடிப்போம். பாரம்பரிய முறைப்படி வெளியில் சென்று வந்தவுடன் கை, கால்களை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு.” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
 

click me!