செங்கல்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் முதலை நீரில் நீந்தி செல்கிறது என்ற போட்டோ 2வது நாளாக உலா வர ஆரம்பிக்க திமுக மீதான விமர்சனங்களும் அதிகரித்து உள்ளன.
செங்கல்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் முதலை நீரில் நீந்தி செல்கிறது என்ற போட்டோ 2வது நாளாக உலா வர ஆரம்பிக்க திமுக மீதான விமர்சனங்களும் அதிகரித்து உள்ளன.
முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தை கடுமையாக புரட்டி எடுத்து வருகிறது. பருவமழை தொடங்கியது முதலே பல மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டே இருக்கிறது.
தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, நெல்லை என மழை உண்டு இல்லை என்று மக்களை பாடாய்படுத்தி வருகிறது. தொடர் மழையால், அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் நிரம்பி தளும்புகின்றன.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடக்கத்தில் இப்படி பருவமழை வெளுத்து வாங்கும் என்று யாரும் எதிர்பாராத அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
சுரங்க பாதைகளில் மழைநீர், போக்குவரத்து நிறுத்தம் என்று மக்களின் பெரும்பான்மையான நேரம் அவதியில் கழிந்து வருகிறது. இந் நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் வெள்ள நீரில் விஷ ஜந்துகள் உலா வர ஆரம்பித்துள்ளன.
அதிலும் குறிப்பாக முதலை உலா வருகிறது என்று போகிற போக்கில் சில வீடியோக்கள் உலா வந்தன. வீடியோவை பார்த்த பலரும் முதலை நடமாட்டம், எச்சரிக்கை என்று போர்டு அறிவிக்காத அளவுக்கு அலர்ட் செய்தனர்.
கூடுவாஞ்சேரி சாலையில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சாலையில் முதலை இன்னமும் நீந்தி வருகிறது என்று தகவல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. ஆனால் இது முதலை கிடையாது, மரக்கட்டை, மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று செங்கல்பட்டு கலெக்டர் அறிவித்து இருக்கிறார்.
ஆனாலும் முதலை பயம் போனபாடில்லை. மேலும் பலர், முதலை என்னவோ ஊருக்குள் மத்தியில் பெருக்கெடுத்து ஓடும் ஜலத்தில் ஜாலியாக உலா வருவது போல போட்டோக்களை அள்ளி தெளித்து மக்களை பயமுறுத்தி வருகின்றனர்.
மீன் பிடித்தது போக… இப்போது முதலை வந்திருக்கிறது என்றும், சிஎம் இதை ஆய்வு செய்வாரா? என்றும் கேள்விகள் கேட்டு போட்டு தாக்கி வருகின்றனர்.
தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போடுங்க.. வீடு தேடி முதல்வர் வருவாரு என்று சொன்னாங்க… ஆனா முதல்வர் வரல… முதலை தான் வருது என்று கொத்தி பரோட்டாவாக்கி கமெண்டுகளை அள்ளி வீசி இருக்கின்றனர். மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் இப்படி மக்கள் அவதிப்படும் நிலைக்கு ஆளாக யார் காரணம் என்று பட்டிமன்ற பேச்சுகளும் ஓயவில்லை.
எல்லா இடங்களிலும் முதல்வர் நேரடியாக களத்துக்கு வரமுடியாது, இதுவே யதார்த்தம், அதற்காக தான் அதிகாரிகளும், அமைச்சர்களும் களம் இறங்கி இருக்கின்றனர், தேவையில்லாத அச்சத்தை மக்கள் மத்தியில் விதைக்க வேண்டாம் என்று பிரசங்கம் செய்து வருகின்றனர்… மழையால், வீடிழந்து, உடமை இழந்து தனித்து, தவித்து நிற்கதியாய் இருக்கும் மக்களின் காதுகளில் இந்த குரல் விழுகிறதா என்றுதான் தெரியவில்லை….!!