தமிழகத்தில் ரூ.1609 கோடியில் 648 மேம்பாலங்கள் கட்டப்படும்… அமைச்சர் ஏ.வ.வேலு அதிரடி அறிவிப்பு!!

By Narendran SFirst Published Nov 30, 2021, 6:54 PM IST
Highlights

தமிழகத்தில் 1600 கோடியில் 648 மேம்பாலங்கள் கட்டப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் 1600 கோடியில் 648 மேம்பாலங்கள் கட்டப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. மேலும் பல பகுதிகளில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. சென்னையில் பெய்த கன மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதோடு வெள்ளக்காடாக கட்சியளித்தது. மேலும் தாழ்வான பகுதிகளுக்குள் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நகரின் ஒருசில பகுதிகளில் சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வரமுடியாத சூழலில் உள்ளனர். இவ்வாறு மழை கடும் பாதிப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் பாலாற்றில் தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, தரைப்பாலங்கள் சேதமடைந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் ரூ1,609  கோடியில் 648 மேம்பாலங்கள் கட்டப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

வேலூர் பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக விரிஞ்சிபுரம் தரைப்பாலம் சேதமானது. இந்நிலையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இந்த ஆண்டு கனமழை பெய்தது என்றும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரால் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் 322 மீட்டர் நீளம் கொண்ட விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தில் 80 மீட்டர் அளவுக்கு சேதமாகியுள்ளதாக கூறிய அவர், சேதமடைந்த பாலத்தில் தற்காலிக பாலம் அமைக்கப்படும் என்றும் இங்கு தரைப்பாலம் கட்ட முடியாது என்றும் தெரிவித்தார்.

மாற்றாக ரூ30 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என்று கூறிய அவர், தமிழகத்தில் ஏற்கனவே 1,681 தரைப்பால பகுதிகளில் உயர் மட்ட மேம்பாலம் கட்ட ரூ2,401 கோடி ஒதுக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதாகவும் இதில் முதற்கட்டமாக 648 தரைப்பாலங்கள் மேம்பாலமாக கட்டுவதற்கு ரூ1,609 கோடியில் பணிகள் நடைபெறும் என்றும் இதில் விரிஞ்சிபுரம் பாலம் முதற்கட்டத்தில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் சேதத்தை முழுமையாக கண்டறிய முடியவில்லை என்று கூறிய அவர், வெறும் 75 சதவீதம் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளதாகவும் மழை முடிந்த பின்னர்தான் முழுமையாக கணக்கெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். மத்திய அரசிடம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேதங்களை சீரமைக்க ரூ1,444 கோடி நிதி கேட்டுள்ளதாகவும் மேலும், தமிழகத்தில் உள்ள நிதியில் இருந்து 200 கோடி ரூபாயில் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைகள், பாலங்கள் சீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

click me!