சிறை பணியாளர்களுக்கு தடுப்பூசி... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 3, 2021, 2:49 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறை பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாக கருதி அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது, பரோல் வழங்குவது தொடர்பாகவும், சிறைகளில் காலியாக உள்ள மருத்துவர், தூய்மைப் பணியாளர்கள் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புவது தொடர்பாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,தமிழகத்தில் உள்ள சிறைகளில் தற்போது 13 ஆயிரத்து 854 கைதிகள் மட்டும் உள்ளதாகவும், இது மொத்த எண்ணிக்கையான 23 ஆயிரத்து 592 கைதிகளில், 58.72 சதவீதம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1295 சிறைக் கைதிகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 38 பேருக்கு இரண்டாவது டோசும் போடப்பட்டுள்ளது என்றும் இது தவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கைதிகள் மட்டுமல்லாமல், சிறை பணியாளர்கள் 700 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவத்ற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை, தமிழக அரசின் அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிறை பணியாளர்களையும், கைதிகளையும் முன்கள பணியாளர்களாக கருதி, அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டனர்.

மேலும், எதிர்காலத்தில் புதிதாக தொற்று பாதிப்பு அதிகமானால், சிறை கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பாக முடிவு செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு, நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

click me!